#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"இது முற்றிலும் தவறானது" கோலி பற்றிய கருத்துகளுக்கு சச்சின் தடாலடி பதில்!
கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவருடைய காலத்தில் எவரும் எட்டிப்பிடிக்க முடியாத பல சாதனைகளை படைத்தவர் அவர்.
சர்வதேச அளவில் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 15,921 ரன்களும் 51 சதங்களும், 6 முறை இரட்டை சதமும் அடித்துள்ளார். 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் 18,426 ரன்கள்; 49 சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதமும் அடித்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.
சச்சினின் சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்து வந்து கொண்டிருக்கிறார் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. சச்சினின் சாதனைகள் அனைத்தையுமே இவர் நிச்சயம் முறியடித்து விடுவார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பலர் விராட் கோலியை சச்சினோடு ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.
சர்வதேச அளவில் 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி 6331 ரன்களும் 24 சதங்களும் 6 முறை இரட்டை சதங்களும் அடித்துள்ளார். மேலும் 216 ஒருநாள் போட்டியில் ஆடியுள்ள அவர் 10,232 ரன்களும் 38 சதங்களும் அடித்துள்ளார். 29 வயதே ஆன விராட் கோலி இன்னும் பல்வேறு சாதனைகள் புரிவார் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில் சிலர் சச்சினை விட விராட் கோலி தான் திறமையானவர் என கூறி வருவது சச்சினின் ரசிகர்களை புண்படுத்துவது போல் அமைந்து விடுகிறது. இதனால் சமூக வலைதளங்களில் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் சிலர் சச்சின் ஆடிய சூழல் வேறு; வீரர்கள் வேறு. இப்போதைய சூழலும் வீரர்களும் முற்றிலும் வேறுபட்டவர்கள். அப்படியிருக்கையில் வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிடக்கூடாது. சச்சின் ஆடிய காலக்கட்டத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், கிளென் மெக்ராத், முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, சமிந்தா வாஸ் போன்ற தலைசிறந்த அபாயகரமான பவுலர்கள் இருந்தார்கள். இவர்களை எல்லாம் சமாளித்து சச்சின் செய்த சாதனைகளை இன்றைய விராட் கோலியின் சாதனைகளையும் சச்சினுடன் விராட் கோலியையும் ஒப்பிடக்கூடாது என்றும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஒப்பீடு குறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், "ஒரு பேட்ஸ்மேனாக கோலியின் வளர்ச்சி மிகப்பெரியது. கோலியிடம் ஒருவிதமான ஸ்பார்க் இருக்கிறது. கோலி இந்த காலம் மட்டுமல்லாது எல்லா காலத்துக்குமான சிறந்த வீரர்களில் ஒருவர். ஆனால் வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிடக்கூடாது. அதனால் அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. 1960, 70, 80கள் மற்றும் என் காலத்தில் வீசிய பவுலர்களுக்கும் இப்போதைய பவுலர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் இந்த தலைமுறை வீரர்கள் வேறுவிதமாக ஆடுகிறார்கள். விதிமுறைகள், தடைகள், ஆடுகளங்கள், பந்துகள் என அனைத்துமே முற்றிலும் மாறானவை. அப்போதெல்லாம் ஆஸ்திரேலிய மைதானங்களில் கான்கிரீட்டை தொட்டால்தான் பவுண்டரி. பிறகு அதெல்லாம் மாறிவிட்டது. எனவே வெவ்வேறு காலக்கட்டங்களில் ஆடிய வீரர்களை ஒப்பிடுவது என்பதே தவறான செயல்" என்று சச்சின் டெண்டுல்கர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.