கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால்! சமாளிப்பாரா விராட் கோலி?
இன்று நடைபெறும் உலக கோப்பை தொடரில் 22வது ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மான்செஸ்டரில் நடைபெற உள்ள இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்திய அணியில் மிகப்பெரிய பலமாக இருந்தவர்கள் துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான். ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற ஆட்டத்தில் ஷிகர் தவானுக்கு கட்டைவிரலில் அடிபட்ட நிலையில் அவர் மூன்று வாரங்களுக்கு ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு பதில் துவக்க ஆட்டக்காரராக களம் இறக்க ஒரே வாய்ப்பு கேஎல் ராகுல் மட்டுமே.
இந்நிலையில் நான்காவது வீரராக விஜய் ஷங்கரை தான் களமிறங்குவார்கள் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இத்தகைய பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள இந்த போட்டியில் அனுபவம் குறைவாக உள்ள கேஎல் ராகுல் மற்றும் விஜய் சங்கர் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பது பலரின் கேள்வியாக இருந்துவருகிறது.
இதற்கு அடுத்த மிகப்பெரிய சவால் பாகிஸ்தான் அணியில் உள்ள இடதுகை பந்துவீச்சாளர்கள். இந்திய அணியை பொறுத்தவரை இடதுகை பேட்ஸ்மேனாக இருந்தவர் ஷிகர் தவான் மட்டுமே. அவரை விட்டால் அடுத்தது ரவீந்திர ஜடேஜா. இவருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது சந்தேகமே. பாகிஸ்தான் அணியில் உள்ள மூன்று இடதுகை பந்துவீச்சாளர்களை இந்தியாவின் வலதுகை பேட்ஸ்மேன்கள் எந்த அளவிற்கு சமாளிப்பார்கள் என்பதும் ஒரு சவால்.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் முதல் பத்து ஓவரிலேயே இந்தியாவின் முக்கிய மூன்று விக்கெட்டுகளை பாகிஸ்தான் அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கைப்பற்றினார் என்பது அனைவருக்கும் நினைவில் இருக்கும். இன்றைய போட்டியிலும் அந்த முகமது அமீர் மீது தான் பாகிஸ்தான் அணி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக சரியான நேரத்தில் விக்கெட்டுகளை கைப்பற்ற கூடியவர் முஹம்மது ரியாஸ். இவர்களை சமாளிக்க விராட் கோலி என்ன வியூகம் வகுத்துள்ளார் என்பதை காண அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் இந்தியாவை பொறுத்தவரை நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இந்திய அணிக்கு கிடைத்த மைதானங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தில் முறையான பயிற்சியை எடுக்க முடியவில்லை என்பதும் ஒரு வருத்தமான செய்தி. கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போட்டியின் போது அவர்கள் ஆடுகளங்களில் பந்து வீசியது தான். பின்னர் உள்விளையாட்டரங்கில் மட்டுமே பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த போட்டியில் ஆரம்பத்தில் அவர்கள் எந்த அளவிற்கு தங்களது திறமையை நிரூபிப்பார்கள் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இத்தனை சவால்களையும் மைதானத்தில் எதிர்கொண்டு நூறு கோடிக்கும் மேலான இந்திய ரசிகர்களின் கனவினை நிவர்த்தி செய்யுமா விராட் கோலி தலைமையிலான இந்திய அணி! பொறுத்திருந்து பார்ப்போம்.