மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விமர்சனங்களுக்கு விடை கொடுத்த கே.எல்.ராகுல்: முதல் ஒருநாள் போட்டியில் போராடி வென்ற இந்திய அணி..!
கே.எல்.ராகுல்-ஜடேஜா ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது . அந்த அணியின் டிராவிஸ் ஹெட் , மிட்சல் மார்ஷ் ஆஸ்திரேலிய அணிக்கும் தொடக்கம் அளித்தனர். டிராவிஸ் ஹெட் 5 ரன்களில் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கேப்டன் ஸ்மித் களமிறங்கினார், அவர் நிதானமாக விளையாட, மிட்செல் மார்ஷ் அதிரடியாக பேட்டை சுழற்றினார். பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதம் விளாசினார்.
ஸ்மித் 22 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 65 பந்துகளில் 81 ரன்கள் குவித்து வெளியேறினார் . இதனை தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி ,சிராஜ் தலா 3 விக்கெட்களும் , ஜடேஜா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
189 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு இஷான் கிஷன்-சுப்மன் கில் ஜோடி ஆட்டத்தை தொடங்கியது. இஷான் கிஷன் 3, விராட் கோலி 4 சூர்யகுமார் யாதவ் 0 அடுத்தடுத்து ஆட்டமிழக்க சுப்மன் கில் 20 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
இதன் காரணமாக இந்திய அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இதன் பின்னர் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்த கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடினார். ஹர்திக் பாண்டியா 25 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா கே.எல்.ராகுலுடன் இணைந்து சரிவில் இருந்து மீட்டனர்.
இந்த ஜோடி நிலைத்து நின்றதுடன் தவறான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் விளாசினார். 39.5 ஓவர்களில் 191ரன்கள் சேர்த்த இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 75ரன்களுடனும் , ஜடேஜா 45ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்சல் ஸ்டார்க் 3, மார்க் ஸ்டாய்னிஸ் 2 விக்கெட் வீழ்த்தனர் . இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2 வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.