விராட் கோலி பேப்பர் கேப்டன் தான், உண்மையான கேப்டன் தல தோனிதான்; இந்திய வீரர் பரபரப்பு பேச்சு.!
உலக கோப்பை போட்டித் தொடர் இன்னும் சில தினங்களில் இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை மாதம் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலக கிரிக்கெட் தரவரிசையில் முதல் 10 இடங்களை வகிக்கும் அணிகள் இத்தொடரில் பங்கேற்க உள்ளன. இந்நிலையில் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 22 ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளது.
மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. இந்திய அணி இளம் கேப்டன் விராட் கோலி தலைமையில் பங்கேற்கவுள்ளது. இது கோலி பங்கேற்கும் மூன்றாவது உலகக்கோப்பை தொடராகும். இன்று கார்டிப்பில் நடக்கும் பயிற்சி போட்டியில் இந்திய அணி, வங்கதேச அணியை எதிர்கொள்வதோடு பயிற்சி போட்டிகள் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், இந்திய அணி குறித்து இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா கூறும்போது: ‘உலகக்கோப்பை தொடருக்கான அணியில் பேப்பர் அளவில் கோலி கேப்டன். ஆனால் போட்டிகளின் போது களத்தில் உண்மையான கேப்டனாக தோனி தான் இருப்பார் என நினைக்கிறேன். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும் இன்னும் இந்திய அணியில் தோனியின் பங்கு மாறவேயில்லை.
பவுலர்களுக்கு ஆலோசனை கொடுப்பது, பீல்டிங் செட் செய்வது, என கேப்டனுக்கே கேப்டனாக செயல்படுகிறார். தோனி அணியில் உள்ள வரை கோலிக்கு ஒருகவலையும் இல்லை. இதை கோலியே ஒத்துக்கொள்வார்.’ என்றார்.