இறைச்சி கடையை சீல் வைக்க முயன்ற போலி ஆய்வாளர் அதிரடி கைது: சுவாரசிய பின்னணி..!



a-fake-health-inspector-who-tried-to-seal-a-meat-shop-w

கோயமுத்தூர் மாவட்டம், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர் பகுதியில் உள்ள அழுக்கு சாமியார் கோயில் வீதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (22). அதே பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல நேற்று கோழி இறைச்சியை விற்பனைக்காக தயார் செய்து கொண்டிருந்தபோது, கடைக்கு வந்த நபர் ஒருவர் தன்னை சுகாதார ஆய்வாளர் என்று கூறி அறிமுகம் செய்துள்ளார்.

மேலும் தர்மராஜின் கோழி இறைச்சி கடையில், விதிமுறைகளை பின்பற்றாமல் சுகாதார சீர்கேடு அடந்துள்ளாதாகவும், இதன் காரணமாக கடை சீல் வைக்கப் போவதாகவும் கூறியதாக தெரிகிறது. இதன் பின்னர் சீல் வைப்பதை தவிர்க்க, அவரிடம் ரூ. 2500 அபராத தொகை செலுத்துமாறு கூறியுள்ளார். அதற்கு தர்மராஜ் ரூ. 500 மட்டும் கொடுத்ததுடன் அந்த பண்த்திற்கு ரசீது கேட்டுள்ளார்.

இதற்கிடையே சுகாதார ஆய்வாளராக வந்த நபர் கடையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர், தர்மராஜ் அவரது நண்பர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து ஆனைமலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். காவல் உதவி ஆய்வாளர் கௌதம் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள சண்முகபுரம், அண்ணா நகர் பகுதியை சேர்ந்த குருநாதன்(32) என்பது தெரியவந்தது.

மேலும், அவர் தர்மராஜிடம் தன்னை சுகாதாரத்துறை அதிகாரி என்று கூறி ஏமாற்றியதும் தெரிய வந்தது. இதனையடுத்து தர்மராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் குருநாதன் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.