வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆற்றுப்பாலம்.. சிக்கிய நபரை சேலை வீசி காப்பாற்றிய பொதுமக்கள்.!
நீலகிரி மாவட்டத்தில் ஒரு வாரமாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மண்சரிவுகள் போன்றவை ஏற்பட்டுள்ளதுடன், மரங்களும் முறிந்து சாலைகளில் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கூடலூர், பன்தூர் பகுதியில் இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில், கூடலூர் பழைய ஆர்.டி.ஓ அலுவலக சாலையை ஒட்டி செல்லும் மங்குழி ஆற்றில் வெள்ளம் சென்ற நிலையில், ஆற்றை பாலம் உதவியுடன் கடக்க முயற்சித்த நபர் பாலம் உடைந்து வெள்ளத்தின் பிடியில் சிக்கிக்கொண்டார்.
அருகே இருந்த பொதுமக்கள் சுதாரிப்புடன் செயல்பட்டு சேலையை கயிறாக கட்டி நபரை பத்திரமாக மேலே மீட்டனர். இதுகுறித்த விடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. பாலம் உடைந்ததால் போக்குவரத்து அப்பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது.