#அரியலூர் : போலிஸாரை எதிர்த்து, ராணுவவீரர் போராட்டம்.. கலெக்டர் ஆஃபீஸ் முன் தர்ணா.!



An army officer protest at collector office against police department

அரியலூர் மாவட்டத்தில் உள்ள, ஸ்ரீபுரந்தான் எனும் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன். இவருடைய மகனான ரஞ்சித்குமார் (வயது 45) இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த கிராமத்தில் உள்ள தன் வீட்டைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட ரஞ்சித் ஏற்பாடு செய்துள்ளார். அப்போது ரஞ்சித்தின் சித்தப்பா மகன்களான சத்தியமூர்த்தி மற்றும் சரண்ராஜ் என்ற இருவரும் சேர்ந்து தந்தை வரதராஜனை தாக்கியுள்ளனர்.

இதனால் தாக்குதலுக்கு உள்ளான வரதராஜனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சத்தியமூர்த்தி மற்றும் சரண்ராஜ் இருவரும் தமிழக காவல்துறையில் பணிபுரிவதாக தெரிகிறது. இந்த நிலையில், இவர்கள் மீது விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் ரஞ்சித் குமார் புகார் கொடுத்துள்ளார். ஆனால், குற்றவாளிகள் இருவரும் போலீசில் பணிபுரிவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Police Department

இதன் காரணமாக, ராணுவவீரர் ரஞ்சித் குமார் மிகவும் விரக்தி அடைந்த நிலையில், நேற்று காலை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனது ராணுவ உடையில் அமர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை எழுந்து செல்ல சொல்லி கூறிய போதும், அதற்கு அவர் உடன்படாமல் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சர்ச்சை ஏற்பட்டது. கூட்டம் கூட துவங்கியதால் பதற்றம் அடைந்த பாதுகாப்பு வீரர்கள் ரஞ்சித் குமாரை குண்டுகட்டாக அங்கிருந்து தூக்கிச் சென்று அருகில் இருக்கும் அறையில் வைத்து சமாதானம் செய்தனர். அதன் பின் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தங்கள் புகாரின் மேல் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து சமாதானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, ரஞ்சித் குமார் வீடு திரும்பியுள்ளார்.