சென்னையை நெருங்கிய மாண்டஸ் புயல்!.. ஓவ்வொரு வீட்டிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை: அரசு அறிவுறுத்தல்..!



As Cyclone Mandus makes landfall, minimum wind speed of 65 kmph to 75 kmph and maximum speed of 85 kmph is expected.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த  தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனை தொடர்ந்து மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் படிப்படியாக நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெறக் கூடும் என்று இந்திய  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மாண்டஸ் புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவு தீவிர புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நாளை  அதிகாலை வரையிலான காலகட்டத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது குறைந்தபட்சம் மணிக்கு 65 கி.மீ முதல் 75 கி.மீ வேகத்திலும், அதிகபட்சமாக 85 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும் நேரமான இன்று இரவு பொது மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், தேவையான காய்கறி, பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.