3 கொலை, 30 வழக்குகள்.. A கேட்டகிரி ரௌடியை தட்டிதூக்கிய சென்னை போலீஸ்.. காதலில் விழுந்ததால் மதியிழந்து மாட்டிய சம்பவம்.!
காதலியிடம் இருந்து தன்னை பிரிந்தவர் என ஒருவரை வெட்ட அரிவாள் தூக்கி முழு நேர ரௌடியாக வலம்வந்த நபரை தனிப்படை காவல் துறையினர் தட்டிதூக்கிய சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள திருவெல்லிக்கேணி, அண்ணா நகர், போரூர் பகுதியில் பட்டாகத்தியோடு சுற்றி வந்த 8 பேர் கும்பலானது மக்களை மிரட்டி செல்போன், பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சில்வண்டுகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், இக்குற்றத்தில் முக்கிய நபராக செயல்பட்ட ரௌடி இளங்கோ தலைமறைவானான்.
அவனை தனிப்படை அமைத்து தேடிய சென்னை காவல் துறையினர், பெங்களூரில் சுற்றிக்கொண்டு இருந்தவனை அலேக்காக சுற்றிவளைத்து கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் அம்பலமானகின.
செட்டியார் அகரம் பகுதி ரௌடியாக வலம்வந்த இளங்கோ, கடந்த 2020 மார்ச் மாதம் காதலி தன்னுடன் இருந்து பிரிந்து செல்ல காரணமாக இருந்ததாக ஸ்ரீதர் (வயது 55) என்பவரை நள்ளிரவில் வீடுபுகுந்து சரமாரியாக வெட்டி தப்பி சென்றார். இந்த வழக்கில் இளங்கோவனின் நண்பர் நரேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், இளங்கோவன் தலைமறைவாகினார்.
பின்னர், வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, கெம்மராஜபுரம் கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்களை கொலை செய்து ஆற்றில் புதைத்த வழக்கில் ஓராண்டு கழித்து இளங்கோ மற்றும் அவனின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சிறையில் இருந்து பிணையில் வெளியே சென்ற இளங்கோ, பட்டாக்கத்தியை வைத்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறான்.
கடந்த டிசம்பர் மாதம் மேற்கூறிய ஸ்ரீதரை மீண்டும் கொலை செய்ய முடிவெடுத்து வீட்டிற்கு சென்ற நிலையில், அங்கு ஸ்ரீதர் இல்லாத காரணத்தால் ஆத்திரத்தில் டீக்கடையில் நின்று கொண்டிருந்த முகம்மது என்பவரை வெட்டி பணம், செல்போனை பறித்துள்ளான். அதே நாள் இரவில் அண்ணாநகரில் வாகன ஓட்டிகளை தாக்கி பணம் பறித்து இருக்கிறான்.
பின்னர் அடுத்தடுத்த நாட்களில் திருமங்கலம், போரூர் என வழிப்பறி சம்பவம் நடைபெற்றுள்ளது. இறுதியாக அவன் இங்கிருந்தால் மாட்டிக்கொள்வோம் என பெங்களூர் புறப்பட்டு சென்ற நிலையில், தனிப்படை காவல் துறையினர் பெங்களூரில் வைத்து இளங்கோவை கைது செய்தனர்.
காவல் துறையினரின் ரௌடி பட்டியலில் டாப் லிஸ்டான A பிரிவில் ரௌடியாக இருந்த இளங்கோவின் மீது சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட பல மாவட்டங்களில் 3 கொலை, 30 கொள்ளை உட்பட பிற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.