பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை கடத்தி செல்ல முயன்ற தம்பதி கைது.. சென்ட்ரல் இரயில் நிலையத்தில் அதிர்ச்சி.!



Chennai Central Baby Kidnap Couple Arrested by Railway Police Baby Rescued

சென்னையில் உள்ள கேளம்பாக்கம், அடுக்குமாடி குடியிருப்பில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருபவர் ஹேமந்த் குமார் (வயது 35). இவரின் மனைவி லட்சுமி. இவர்கள் இருவருக்கும் பிறந்து ஒருமாதமான ஆண் குழந்தை உள்ளது. நேற்று குழந்தை தீடீரென மாயமான நிலையில், இதுகுறித்து ஹேமந்த் குமார் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு குழந்தையை தேட தொடங்கிய நிலையில், குழந்தையை கடத்தியவர்கள் வெளியூர் தப்பி செல்ல அதிகளவு வாய்ப்புகள் உள்ளதால் இரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

குழந்தையின் புகைப்படத்துடன் விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பேருந்து மற்றும் இரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

chennai

அப்போது, தம்பதி சந்தேகத்திற்கு இடமான வகையில் கைக்குழந்தையுடன் இரயில் நிலைய 9 ஆவது நடைமேடையில் சுற்றிவந்ததை அதிகாரிகள் கேமராவில் பார்த்துள்ளனர். இவரிடமும் நடைமேடையில் வைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இருவரும் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் இரயிலில் பயணம் செய்ய இருந்தது தெரியவந்துள்ளது.

தம்பதிகள் இருவரும் முன்னுக்கு பின்னர் முரணாக பதில் அளிக்கவே, இருவரையும் இரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அப்போது, தம்பதி பெங்களூரை சேர்ந்த மஞ்சு (வயது 34), கோமளா (வயது 28) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் கேளம்பாக்கத்தில் குழந்தையை கடத்தி பெங்களூர் செல்ல இருந்ததும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, இந்த திக்வல்லை கேளம்பாக்கம் காவல் துறையினருக்கு தெரிவிக்கவே, கேளம்பாக்கம் காவல் துறையினர் பெற்றோருடன் சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வந்து குழந்தையை பெற்றுக்கொண்டனர். மாயமான குழந்தையை பெற்றோர்கள் ஆரத்தழுவி, அதிகாரிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. 

குழந்தையை கடத்தி செல்ல முயற்சித்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.