டாஸ்மாக் கடைகளிலும் தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது வினியோகம்..!! ஹை-கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!
தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது வகைகளை விற்பனை செய்ய தடை விதிக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை, கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள 4 வணிக வளாகங்களில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது வகைகளை விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. இதனையடுத்து அந்த வணிக வளாகங்களில் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இது தற்போது புழக்கத்தில் இருக்கும் பணம் எடுக்கும் ஏ.டி.எம் இயந்திரம் போல் செயல்பட்டு பீர், பிராந்தி, விஸ்கி மற்றும் ஒயின் உள்ளிட்ட அனைத்து வகை மதுவையும் விநியோகம் செய்யும் என்று கூறப்படுகிறது. இதனை பின்பற்றி டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களிலும் தானியங்கி இயந்திரங்களை நிறுவ டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது வினியோகம் செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு உட்புறமாக தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாகவும் , 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது .
தமிழக அரசின் இந்த விளக்கத்தை ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது வகைகளை வினியோகம் செய்ய தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.