அண்ணன் - தம்பி சொத்து தகராறில் நடந்த கொடூரம்; இளைஞர் பலியானதால் மனைவி, பச்சிளம் குழ்ந்தை தவிப்பு.!
சென்னையில் உள்ள மாதவரம், அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் பாஸ்கர். இவரின் மனைவி ரோஸ். தம்பதிகளுக்கு நரேஷ் குமார் என்ற 33 வயது மகனும், விக்னேஷ் குமார் என்ற 30 வயது மகனும் இருக்கின்றனர். இருவரும் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்கள்.
இருவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியே தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இதனிடையே, பாஸ்கர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிடவே, ரோஸ் மாதாவரத்தில் உள்ள சகோதரரின் வீட்டில் தங்கியிருந்து வந்துள்ளார். அங்கிருந்தவாறு தனியார் தொழிற்சாலையில் கூலித்தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்துள்ளார்.
அம்பேத்கர் நகரில் இருக்கும் குடும்ப சொத்தை விற்பனை செய்ய அண்ணன் - தம்பி முடிவெடுத்து, அதற்காக முன்பணம் பெற்று இருக்கின்றனர். பணத்தை பகிர்ந்துகொள்வதில் சகோதரர்களுக்கு இடையே தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று விக்னேஷ் குமார் - நரேஷ் குமார் இடையே நடுரோட்டில் வாக்குவாதம் நடந்துள்ளது.
வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நரேஷ் குமார், ஆட்டோவில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சகோதரர் விக்னேஷ் குமாரின் தலையில் அடித்து இருக்கிறார். படுகாயமடைந்த விக்னேஷ் குமார் சரிந்து விழ, அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தபோது உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மாதவரம் காவல் துறையினர், நரேஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பலியான விக்னேஷுக்கு வாசுகி என்ற மனைவியும், 5 வயதுடைய புவிஷா என்ற மகளும் இருக்கின்றனர். அண்ணன் - தம்பி சண்டையில் இவர்களின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.