"நீங்கள் உண்மையில் மக்களுக்காக உழைக்கிறீர்களா?".. அமைச்சர் உதயநிதியிடம் கண்ணீருடன் பாசப்போராட்டம் நடத்திய இளைஞர்.!
தனது நண்பர் மற்றும் அவரின் தந்தை இறந்த துக்கத்தில் அமைச்சரிடம் கண்ணீருடன் இளைஞர் வைத்த கோரிக்கைகள் பலரையும் கலங்க வைத்தது.
சென்னையில் உள்ள குரோம்பேட்டை, குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். இவரின் மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19), மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதி 424 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.
மருத்துவத்துறையின் மீதுள்ள ஆர்வம் ஒருபுறம், அரசு இடஒதுக்கீட்டுக்கான மதிப்பெண் கிடைக்காதது மறுபுறம் என பாதிக்கப்பட்ட ஜெகதீஸ்வரன், கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து உயிரை மாய்த்தார். மகன் இறந்த துக்கத்தில் இருந்த தந்தை செல்வமும் இன்று தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், மாணவரின் குடும்பத்தை நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். அப்போது, மாணவரின் நண்பர், "உங்களால் எதுவும் செய்யமுடியதா?. நீங்கள் உண்மையில் மக்களுக்காக உழைக்கிறீர்களா?. இல்லை. இன்னும் எத்தனை ஜெகதீஷ், அனிதாவை இழக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் இதே கோரிக்கையா?.

நாங்கள் எதற்காக 12ம் வகுப்பு படிக்கிறோம் என்றே தெரியவில்லை. என்னிடம் பணம் இருந்ததால், நான் தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க சேர்ந்துவிட்டேன். ஆனால், அவனால் முடியவில்லை. அவனிடம் பணம் இல்லை.
எனது அப்பாவால் பணம் கொடுக்க முடிந்தது. செல்வம் மாமாவால் பணம் கொடுக்க முடியவில்லை. பணம்தான் இங்கு அனைத்தையும் முடிவு செய்கிறது. இதற்கு உரிய தீர்வு எடுங்கள்" என கண்ணீருடன் தனது நிலையை அமைச்சர் முன்பு விவரித்தார்.