15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai Regional Meteorological Center Announcement

மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்ததாழ்வு காரணமாக இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 7, 8-ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 - 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 4-ஆம் தேதியிலிருந்து 6-ஆம் தேதி வரை வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  மத்திய மேற்கு வங்கக்கடல், குமரிகடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிகாற்று வீசக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.