பெட்ரோல் பல்க் மேற்கூரை சரிந்து விழுந்து பயங்கரம்: ஒருவர் பலி., 7 பேர் படுகாயம்.. சென்னையில் பகீர் சம்பவம்.!



chennai-saidapet-petrol-punk-roof-collapse-1-died-7-inj

 

சென்னையில் உள்ள சைதாப்பேட்டை, ஜோன்ஸ் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பெட்ரோல் பங்க்கில் நேற்று இரவு வழக்கம்போல பணியாளர்கள் தங்களின் வேலைகளை கவனித்து வந்தனர். 

அப்போது, திடீரென பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், இரவுநேர பணியில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு உயிருக்கு அலறித்துடித்தனர். 

தகவல் அறிந்து வந்த சைதாப்பேட்டை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர், துரிதமாக செயல்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் 30 வயதுடையவர் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தோரை சந்தித்து நலம் விசாரித்தார். 

அதனைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "17 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. அது இரவில் திடீரென சரிந்து விழுந்துள்ளது. காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. 

விபத்து குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தனியாரோ, அரசு சார்ந்த கட்டிடமோ, அதன் நிலைத்தன்மை குறித்து அவ்வப்போது சோதித்துக்கொள்ள வேண்டும். 

இழப்பீடு அரசு முடிவெடுக்கும். தனியார் நிறுவனத்தின் சார்பிலும் உரிய உதவி அவர்களுக்கு செய்துகொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என கூறினார்.