நள்ளிரவில் பா.ஜ.க தி.மு.க-வினரிடையே தள்ளு முள்ளு: இடையில் சிக்கி சின்னாபின்னமான போலீசார்..!



Coimbatore BJP  protested against the non-removal of the posters last night

கோயம்புத்தூர் மாவட்டம், கோவை-அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தை கட்டமைக்க நூற்றுக்கும் மேற்பட்ட தூண்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தத் தூண்களில் பல்வேறு கட்சியினர், தனியார் அமைப்புகள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேம்பாலங்களின் தூண்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்த உத்தரவு பிறப்பித்து 10 நாட்களுக்கு மேலாகியும் போஸ்டர்கள் மேம்பாலத்தின் தூண்களில் இருந்து அகற்றப்படாததைக் கண்டித்து கோவை மாவட்ட பா.ஜ.கவினர் நேற்று இரவு 10 மணி முதல் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேம்பாலத்தின் தூண்களில் ஒட்டப்பட்டிருந்த தி.மு.க போஸ்டர்களை கிழித்தும், தமிழக அரசைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதன் காரணமாக தி.மு.க-வினர் மற்றும் பா.ஜ.க-வினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பா.ஜனதா கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போஸ்டர்களை கிழித்த பா.ஜ.க.வினரை கைது செய்தனர்.