காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
துபாயில் திருமணம் செய்யாமல் வாழ்க்கை.. கைவிட்ட காதலனுக்கு ஆசிட் வீச்சு.. கோவையில் சம்பவம்.!
வெளிநாட்டில் பணியாற்றுகையில் கணவன் - மனைவி போல வாழ்ந்து, தாயகம் வந்ததும் காதலன் கைவிட்டதால் ஆத்திரமடைந்த பெண்மணி திராவகம் வீசிய சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் கொடிப்புரம் பகுதியை சார்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் ராகேஷ் (வயது 30). இவர் கடந்த 3 வருடமாக துபாயில் இருக்கும் மசாஜ் சென்டரில் பணியாற்றி வந்துள்ளார். இதே மசாஜ் சென்டரில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் திருவள்ளுவர் வீதியை சார்ந்த ஜெயந்தி (வயது 27) என்பவரும் பணியாற்றியுள்ளார்.
ஜெயந்திக்கு திருமணம் முடிந்து பெண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து துபாயில் பணியாற்றி வந்துள்ளார். இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றி வருகையில் நட்பாக ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மாறியுள்ளது.
இருவரும் அங்கேயே தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கணவன் - மனைவி போல் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், தங்கையின் திருமணத்திற்கு கேரளா செல்கிறேன் என ஜெயந்தியிடம் ராகேஷ் தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக துபாயில் இருந்து தமிழகம் வந்துள்ளனர்.
பின்னர், ராகேஷ் திருவனந்தபுரத்திற்கும் - ஜெயந்தி செங்கல்பட்டில் உள்ள வீட்டிற்கும் வந்துவிடவே, இருவரும் அதற்கடுத்து சந்திக்கவில்லை. செல்போனில் மட்டும் பேசிவந்த நிலையில், ராகேஷுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக கேரளாவை சார்ந்த பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. இந்த விஷயம் ஜெயந்திக்கு தெரியவில்லை.
கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னதாக ராகேஷ் கோயம்புத்தூருக்கு வந்து தொழில் தொடங்க திட்டமிட்டு, வீடொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த நிலையில், தனது திருமண புகைப்படங்களை ராகேஷ் ஜெயந்திக்கு வாட்ஸப்பில் அனுப்பி வைத்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயந்தி ராகேஷுக்கு தொடர்பு கொண்டு நியாயம் கேட்டுள்ளார்.
இதனைக்கேட்ட ராகேஷ் இருவரும் சந்தித்து பேசலாம். நான் சொல்லும் இடத்திற்கு நீ வந்துவிடு என்று கூறி, கோவை பீளமேடு பகுதிக்கு வரச்சொல்லியுள்ளார். நேற்று மாலை நேரத்தில் ஜெயந்தி அங்கு வந்த நிலையில், இருவரும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்துபேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
துபாயில் தன்னை திருமணம் செய்வதாக கூறிவிட்டு, இங்கு வந்து என்னை கைவிட்டாயே என்று ஜெயந்தி கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்துள்ளார். எதுவும் பேசாத ராகேஷ் ஜெயந்தியின் செல்போனை பறித்து, தான் அனுப்பிய புகைப்படத்தை ஜெயந்தியின் அலைபேசியில் இருந்து நீக்கியுள்ளார்.
இதனால் உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்ற ஜெயந்தி, காதலனை வஞ்சம் தீர்க்க திட்டமிட்டு கையில் கொண்டு வந்திருந்த திராவகத்தை ராகேஷின் முகத்தில் வீசியுள்ளார். மேலும், கத்தியால் ராகேஷின் கைகளை வெட்டியுள்ளார். இதனை எதிர்பாராத ராகேஷ் நிலைகுலைந்து கீழே விழ, கண்ணில் திராவகம் பட்டு அலறி துடித்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ராகேஷை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஜெயந்தியும் வாழ விரும்பாமல் தூக்க மாத்திரையை அதிகளவு சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
ஜெயந்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரின் விபரம் மற்றும் பிரச்சனை குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் இருதரப்பும் புகார் அளித்துள்ளது. இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.