பெற்றோர்களுக்கு இடையேயான சண்டையில் 7 வயது சிறுவன் கொடூர கொலை; அத்தையின் நெஞ்சை பதறவைக்கும் செயல்.!



Coimbatore Sulur Aunt Killed Child Nephew

 

அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தம்பதி ஜாகிர் உசேன் (வயது 30) - கைருன்னிஷா (வயது 28). இவர்களுக்கு கைரல் இஸ்லாம் (வயது 7) மகன் இருக்கிறார். இவர்கள் மூவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன் வேலை தேடி கோயம்புத்தூருக்கு வருகை தந்துள்ளனர். அங்கு தம்பதிகள் நூற்பாலையில் வேலைக்கு சேர்ந்து இருக்கின்றனர். 

சம்பவத்தன்று வழக்கம்போல தம்பதிகள் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், சிறுவன் வீட்டில் தனியே இருந்துள்ளான். மதியம் தம்பதிகள் சாப்பிட வந்தபோது, வீட்டில் மகன் மயங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவனை மீட்டு சூலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க, சிறுவன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சூலூர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டது உறுதியானது. சம்பவம் நடைபெற்றது மில் வளாகத்திற்குள் என்பதால், வெளியாட்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்த அதிகாரிகள், ஜாகிர் உசேனின் அக்கா (சிறுவனுக்கு அத்தை) நூர்ஜாக்துனிடம் (வயது 32) விசாரணை நடத்தியுள்ளனர்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, தீவிர விசாரணையில் உண்மை ஒப்புக்கொள்ளப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து நூர்ஜாக்துன் அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலம் பேரதிர்ச்சியை தந்து. நூர்ஜாக்துன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சூலூரில் செயல்படும் மில்லில் வேலைக்கு சேர்ந்துள்ளார். 

Coimbatore

தனது கணவர், 7 வயது மகளுடன் மில் வளாகத்தில் தங்கியிருந்தவாறு வேலைகளை கவனித்து வந்த நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஜாகிர் உசேன் குடும்பத்தை வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். அவர்களும் மில் வளாகத்தில் தங்கி இருக்கின்றனர். இருவரின் குழந்தைகளும் விளையாடி மகிந்த வந்துள்ளனர். 

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வேலை தொடர்பாக கைரென்னிஷா - நூர்ஜாக்துன் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இந்த சம்பவம் மில் உரிமையாளரின் காதுகளுக்கு செல்ல, அவர் இருவரையும் யூனிட் மாற்றி பணியில் அமர்த்தியுள்ளார். தான் வேலைக்கு சேர்த்த கைரென்னிஷா தனக்கு எதிராக செயல்பட்டது நூர்ஜாக்துன் இடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இது சகோதரரின் குடும்பம் மீது வெறுப்பை ஏற்படுத்த, அவரின் மகன் தனது மகளுடன் விளையாடுவதிலும் விருப்பம் இன்றி கண்டித்து இருக்கிறார். பலமுறை சிறுவனை கண்டித்தும் அறியாமையால் அவன் கண்டுகொள்ளவில்லை. சம்பவத்தன்று வீட்டிற்கு சாப்பிட வந்த நூர்ஜாக்துன், சிறு பிள்ளைகள் ஒன்றாக விளையாடுவதை கண்டுள்ளார். 

அவருக்கு உச்சகட்ட ஆத்திரம் ஏற்படவே, மகளை அங்கிருந்து விரட்டிவிட்டு பனியன் துணியால் சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்து வேலைக்கு சென்றுள்ளார்" என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.