ராக்கிங் கலாச்சாரத்தை ஒழிக்க.. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.! டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு!



DGP sailenthira babu send order about strict action against ragging culture

இன்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சீனியர்கள் புதிதாக கல்லூரிக்கு வரும் ஜூனியர்களை ராக்கிங் செய்யும் மோசமான பழக்கம் உள்ளது. இந்த நிலையில் கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை  உடனடியாக எடுக்கப்பட  வேண்டும் என, காவல்துறை அதிகாரிகளுக்கு
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

வேலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் சீனியர் மாணவர்கள் புதிதாக கல்லூரியில் சேர்ந்த ஜுனியர் மாணவர்களை அத்துமீறி அரை நிர்வாணமாக கல்லூரி வளாகத்தில் ஓட வைத்து ராக்கிங் செய்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இதில் ஈடுபட்ட சில மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Ragging

இந்த நிலையில் இதுதொடர்பாக, 
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ராக்கிங் கலாச்சாரத்தை முற்றிலும் தடுக்க அதுதொடர்பான புகார்கள் மீது கவனம் செலுத்தி குற்றவாளிகள் மீது உடனடியாக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ராக்கிங் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை தாமதம் செய்யாமல் விரைவில் முடிக்க வேண்டும். இதனை போன்ற சம்பவங்களை  தடுக்க மாவட்ட ராக்கிங் எதிர்ப்புக் குழுக்களை செயல்படுத்த வேண்டும். மாணவர்களுக்ககிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.