தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு டிஜிபி பாலியல் தொல்லை; கோர்ட்டில் முக்கிய ஆவணங்கள் மாயம்.. நீதிபதி அதிர்ச்சி..!
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்று கூறி பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய காவல் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார் பற்றி விசாரிப்பதற்காக, பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டத்தின்படி, அப்போதைய கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட 'விசாகா' குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு தனது விசாரணையை முடித்து கடந்த ஏப்ரல் மாதம் அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் படி சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிராக குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வருகிறது. மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிறப்பு டி.ஜி.பி., முன்னாள் காவல் சூப்பிரண்டு ஆகிய இரண்டு பேரும் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களாக சேர்க்கப்பட்ட விக்கிரவாண்டி, செங்குறிச்சி, பரனூர் ஆகிய சுங்கச்சாவடியை சேர்ந்த பணியாளர்கள் ஐந்து பேர் நேரில் வந்து சாட்சி அளித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி விசாரணையை வருகிற 25-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதற்கிடையில் பெண் காவல் அதிகாரி சார்பில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி. பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் ஆடியோ உரையாடல், வாட்ஸ் அப் மெசேஜ் ஆகியவை திடீரென காணாமல் போனது. இதனை அறிந்த நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சியடைந்தார். கானாமல் போன ஆவணங்களின் நகலை வருகிற 25-ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும்போது முக்கிய ஆவணங்கள் காணாமல் போனது விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.