மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்: விழுப்புரம் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் அவசர மனு..!
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி (17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் பகுதியில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் ஸ்ரீமதி 3 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் இதனை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். கடந்த 17 ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் பள்ளி சூறையாடப்பட்டது. அங்கிருந்த பள்ளியின் பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இதில் மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து குற்றப்பிரிவு குற்றபுலனாய்வுதுறையினரும் (CBCID), கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினரும், சமூக வலைதளங்கள் மூலம் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் பற்றி சைபர் கிரைம் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் கைதான பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் மனு அளித்துள்ளனர்.