மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உள்ளாட்சித் தலைவர்கள் இல்லாததின் விளைவு! கஜா கற்றுக்கொடுத்த பாடம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 நாட்களுக்குப் பிறகு கடந்த மூன்று நாட்களாக தான் அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றன. ஆனால் முதல் 5 நாட்கள் எந்தவித தொடர்பும் இல்லாமல் மக்கள் அடைந்த இண்ணல்களை வெளியில் சொல்ல முடியாது. உண்மையாகவே மக்களுக்கு உடனடியாக உதவிகரம் நீட்ட யாரும் முன்வரவில்லை. இதற்கு என்ன காரணம்?
முதல் 5 நாட்களுக்கு புயல் பாதித்த இடங்களில் மக்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. பொறுப்பாக செயல்பட வேண்டிய அரசும் கஜா புயலை வெற்றிகரமாக எதிர்கொண்டதாகவும், புயலால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் ஊடகங்களின் முன் மார்தட்டிக்கொண்டது. இதில் வேடிக்கை என்னவெனில் உண்மையான பாதிப்பு என்னவென்பதை உணராமல் எதிர்கட்சியும் ஆளும் கட்சியின் செயல்பாட்டை பாராட்டியதும் பின்னர் பின்வாங்கியதும் தான்.
இந்த புயலில் பெரிதும் பாதிக்கப்பட்ட கிராமங்கள் கூகுள் வரைபடத்தில் கூட தென்படாதவை. முற்றிலும் மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டதால் பக்கத்து ஊரில் வசிக்கும் உறவினர்களின் நிலை என்ன ஆனது என்பதை கூட தெரிந்துகொள்ள முடியவில்லை. மரங்களால் சூழ்ந்த சாலைகளை சரிசெய்து தீவுகளாக துண்டிக்கப்பட்ட கிராமங்களை ஒன்று சேர்க்கவே இரண்டு, மூன்று நாட்கள் ஆயின.
கிராமங்களின் நிலை என்னவாயிற்று என பார்வையிட முதல் 4 நாட்களில் எந்த அரசு அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ வரவில்லை. ஒவ்வொரு கிராமத்தின் உண்மை நிலையை வெளியில் எடுத்து சொல்ல ஒரு பொதுவான ஆளும் இல்லை. அவரவர் தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய சோகத்தில் இருந்து மீளவே மூன்று நாட்கள் ஆகின. இதில் எப்படி ஊருக்காக போராடுவது.
மக்கள் குடிப்பதற்கும், அத்தியாவசிய தேவைகளுக்குமே தண்ணீர் இன்றி தடுமாறினர். வசதி படைத்தவர்கள் மட்டும் அதிகமான வாடகைக்கு ஜெனரேட்டர்கள் எடுத்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டனர். பொதுமக்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதாயில்லை. ஏதோ, சொந்த கிராமத்தில் இருந்து வெளியூரில் வேலை செய்துவரும் இளைஞர்கள் சில கிராமங்களில் ஜெனரேட்டர் வசதி ஏற்பாடு செய்து மக்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்தனர்.
இதில் ஒரு கொடுமை என்னவெனில் 3 நாட்களுக்கு பிறகு அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜெனரேட்டர்களை இயக்க டீசல் வாங்குவதற்கு கூட மக்களிடம் பணம் வசூல் செய்தது தான். அந்த நேரத்தில் கூட மக்களுக்காக குரல் கொடுக்கவும் பண உதவி செய்யவும் யாரும் இல்லை. பாவம் லாசரு அதிகாரிகளும் எத்தனை ஊர்களுக்கு சென்று மக்களை கவனிக்க முடியும். இதற்கெல்லாம் காரணம் என்ன? அடித்தட்டில் இருக்கும் ஒவ்வொரு கிராம மக்களுக்காக குரல் கொடுக்க ஒரு தலைவன் இல்லாததால் தான்.
2011-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட வில்லை. 2011ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்களின் பதவி காலம் 2016ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அடித்தட்டு கிராம மக்களுக்காக குரல் கொடுக்க ஒரு தலைவன் இல்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் யாரிடம் சென்று தங்களது குறைகளை கூறுவது, தங்களுக்காக யாரை மேலிடத்தில் பேசவைப்பது, தங்களது பாதிப்புகளை எவ்வாறு அரசுக்கு எடுத்துச் சொல்வது என்பதை பற்றி தெரியாமல் தவிக்கின்றனர். அதுவும் குறிப்பாக பாதிக்கப்பட்ட முதல் 5 நாட்களுக்கு அடித்தட்டு கிராமத்து மக்கள் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தது தான் உண்மை. அவர்களின் நிலையை நேரில் பார்த்திருந்தால் நிச்சயம் உடனே அவர்களுக்கு ஒரு தலைவன் தேவை என்பது உங்களுக்கும் புரியும்.
எனவே அடித்தட்டு மக்களின் குரலாக அமைந்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை உடனடியாக தேர்ந்தெடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் விருப்பம். இது அரசின் காதுகளுக்கு எட்டும் வரை பகிர்ந்திடுவோம்.