வாடிக்கையாளரை பார்க்க சென்று நொந்துபோன கஸ்டமர் கேர் அதிகாரி.. நடந்தது என்ன தெரியுமா?.. வச்சி செஞ்சிங் மொமண்ட்..!!
கஸ்டமர் கேருக்கு தொடர்பு கொண்டு டார்ச்சர் செய்து வந்த வாடிக்கையாளரை பார்க்க சென்ற அதிகாரிக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பான கற்பனை பதிவொன்று வைரலாகி வருகிறது.
முகநூல் பக்கத்தில் சபீர் அஹமது என்பவர் பதிவு செய்துள்ள இடுகையில், "கஸ்டமர் கேரில் பணியாற்றும் ஒருவர், வாடிக்கையாளரை சந்திக்க முடிவெடுத்து இருக்கிறார். குறித்த வாடிக்கையாளர் அவ்வப்போது கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துக்கொண்டு இருப்பவராக இருந்துள்ளார்.
இதனால் அவரை சந்தித்து சந்தேகத்தை தீர்க்க வேண்டும் என்று எண்ணிய கஸ்டமர் கேர் பணியாளர், அவரின் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்துள்ளார். கேள்விகளுக்கு விடை கிடைக்காத பட்சத்தில், அவர் இனி தொல்லை கொடுக்காதவாறு கண்டித்துவிட்டு வரவும் திட்டமிட்டு இருக்கிறார்.
வாடிக்கையாளரின் வீட்டிற்கு செல்கையில், அவரின் வீடே அந்த தெருவில் கடைசி வீடாகவும், தனியாகவும் இருந்துள்ளது. தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்புறம் நிறுத்திய பணியாளர், வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். கதவுக்கு அருகில் பெரிய பெட்டி இருந்துள்ளது. அதன்மீது, "உங்களின் அன்புக்கு மிக்க நன்றி" என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்துள்ளது.
காலிங் பெல்லை தேடுகையில் 0 முதல் 9 இலக்கம் வரையிலான எண்களின் பட்டன்கள் இருந்துள்ளது. காலிங் பெல்லை அழுத்தியதும் "வணக்கம்" என்ற குரல் கேட்டுள்ளது. குரலுக்கு பின்னர், தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும், For English Press Number 2 என்று கூறவே, என்ன விளையாட்டு என்று நினைத்த கஸ்டமர் கேர் பணியாளர், எண் 1 ஐ அலுத்தியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, தெரிந்தவர் என்றால் எண் 1 ஐ அழுத்தவும், தெரியாதவர் என்றால் எண் 2 ஐயா அழுத்தவும், கடன் வாங்க வந்துள்ளனர் என்றால் எண் 3, கடன் கொடுக்க வந்தவர் என்றால் எண் 4, பேசியே இருப்பவர் என்றால் எண் 5, நண்பர் என்றால் எண் 6, சொந்தக்காரர் என்றால் எண் 7, கூட்டமாக வந்தால் எண் 8, பால், பேப்பர், தபால் போன்றோர் என்றால் எண் 9, மீண்டும் முதலில் இருந்து கேட்க எண் 0 ஐ அழுத்தவும் என்று கூறியுள்ளது.
ஒருகணம் விழிபிதுங்கிப்போன அதிகாரி, தெரியாதவர் என்பதை குறிப்பிட எண் 2 ஐ அழுத்தியுள்ளார். மீண்டும் அறிவிப்பு ஒலியில், "வாருங்கள் வாருங்கள்., முதலாளி பணி காரணமாக பிஸியாக இருக்கிறார். நீங்கள் சிறிது நேரம் காத்திருங்கள்" என்று கூறியவாறு பாடல் ஒலிக்க தொடங்கியுள்ளது.
"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி" என்று ஒலிக்க ஆரம்பித்த பாடல் 5 நிமிடமாக ஒலித்துள்ளது. வெறுத்துப்போன அதிகாரி, பாடல் முடிவதற்கு முன்னதாகவே மீண்டும் எண் 2 ஐ அழுத்தியுள்ளார். ஒலிபெருக்கியில், "நண்பரே நீங்கள் முழு பாடலையும் கேட்காத காரணத்தால், மீண்டும் உங்களுக்கான அடுத்த பாடல்" என அறிவிப்பு வெளியாகி, "நடக்கும் என்பார் நடக்காது, கிடைக்கும் என்பார் கிடைக்காது" என்ற பாடல் ஒளிபரப்பாகியுள்ளது.
நேரம் செல்லச்செல்ல பொறுமையை இழந்துகொண்டு இருந்த அதிகாரி, முழு பாடல் முடிந்ததும் எண் 2 ஐ அழுத்தியுள்ளார். ஒலிபெருக்கியில், "மன்னிக்கவும்.. முதலாளியால் இன்று உங்களை சந்திக்க இயலாது. அவர் உறங்கிவிட்டார். உங்களால் திரும்பி செல்லவும் இயலாது. நீங்கள் செல்லவேண்டும் என்றால், வாசலில் உள்ள பெட்டியில் ரூ.100 பணம் போட வேண்டும். அப்போதுதான் கதவு திறக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.
இறுதியில் தன்னைத்தானே திட்டிக்கொண்டு, "உங்கள் அன்புக்கு நன்றி" என்று எழுதப்பட்டு இருந்த பெட்டியில் ரூ.100 போட்டதும் கதவு திறந்துள்ளது. தனது கோபத்தை வாகனத்தின் மீது காண்பிக்க, அது இறுதி வரை செயல்படுவதாய் இல்லை. ஆதங்கமான கஸ்டமர் கேர் அதிகாரி, வாகனத்தை தள்ளிக்கொண்டு வீட்டை நோக்கி புறப்பட, தூரத்தில் ஒரு பாடல் "எங்களுக்கும் காலம் வரும், காலம் வாந்தால் வாழ்வு வரும்".." என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.