மீனவ பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உடலை எரித்த கும்பல்.. ராமேஸ்வரம் அருகே பதட்டம்..!
ராமேஸ்வரத்தில் மீனவ பெண்ணை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்க கோரி மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா (45). இவர் நேற்று முன்தினம் கடல் பாசி சேகரிக்க சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆறு வடமாநிலத்தவர்கள் சந்திராவை கேலி செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் இறால் பண்ணை அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் சந்திராவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ளனர். அத்துடன் கொலையை மறைக்கும் நோக்கில் சந்திராவின் உடலை தீ வைத்து எரித்துள்ளனர்.
உயிரிழந்த சந்திராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் வட மாநிலத்தவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணையின் முடிவில் தான் ஆறு வடமாநிலத்தவர்கள் குற்றவாளியா? அல்லது நிரபராதியா என்று தெரியவரும். இந்நிலையில் சந்திராவின் உறவினர்கள் மற்றும் மீனவர்கள் கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து அங்கு 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.