மான் தோல், கொம்பு, காட்டு பன்றியின் மண்டை ஓட்டை பதுக்கிய ஜோதிடர் கைது: திண்டுக்கல் வனத்துறையினர் அதிரடி!..



foresters-has-confiscated-deer-skins-and-moose-horns-wh

வீட்டில்  சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த மான் தோல்கள், கடமான் கொம்பு உள்ளிட்டவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

திண்டுக்கல் அருகே வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மான் தோல்கள், கடமான் கொம்பு உள்ளிட்ட பொருட்களை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து  ஜோதிடர் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் ஜோதிடர் சுந்தரமூர்த்தி. இவர் தனது வீட்டில் வனவிலங்குகளின் தோல், கொம்பு உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையில் திண்டுக்கல் வனச்சரகர் செந்தில்குமார் மற்றும்  வனத்துறை ஊழியர்கள், நேற்று ஜோதிடர் சுந்தரமூர்த்தியின் வீட்டிற்கு சென்று அதிரடியாக சோதனையிட்டனர்.

சோதனையின் போது, 3 புள்ளி மான் தோல்கள், 3 கடமான் கொம்புகள், 6 நரி பல், 17 ஆமை ஓடுகள் மற்றும் காட்டுப்பன்றியின் மண்டை ஓடு - 1, பல் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து அவை அனைத்தையும் பறிமுதல் செய்த வனத்துறையினர் சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். மேலும், அவரிடம் வனவிலங்குகளின் தோல், மண்டை ஓடுகள் உள்ளிட்ட பொருட்கள்  எப்படி கிடைத்தது என்றும், இதனை யாருக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தார் என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.