யூ-டியூபர்களே உஷார்!,. பிராங்க் வீடியோ விவகாரம்: யூ-டியூப் சேனல் மீது பாய்ந்தது வழக்கு..!



Frank video case filed on YouTube channel at coimbatore

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும், அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையிலும் அவர்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலும் செயல்பட்டதாக ஒரு யூ-டியூப் சேனல் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நவீன காலத்தில் பிராங்க் என்ற பெயரில் மக்களை பொது வெளியில் தொல்லை செய்யும் விதமாக வீடியோ எடுத்து வெளியிட்டு வருவது அதிகமாகி உள்ளது. இன்னும் சில வீடியோக்களில் பொதுவெளியில் முகம் சுளிக்கும் வண்ணம் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது அதிகரித்துள்ளது. திடீரென நிகழும் வரம்பு மீறிய செயல்களால் , அதிர்ச்சியையும், திகைப்பையும் ஏற்படுத்துகிறது.

இது தனிமனித சுதந்திரத்திற்கு குந்தகம் விளைவிப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், பிராங்க் வீடியோ எடுப்பதாக கூறி பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும், அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையில் நடந்துகொண்டால், அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட சிறப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரித்திருந்தார்.

இந்த எச்சரிக்கையை மீறி, கோவை 360 டிகிரி என்ற யூ-டியூப் சேனல் பிராங்க் வீடியோவை வெளியிட்டது. இதனையடுத்து, பொதுமக்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையிலும் வீடியோ எடுத்து வெளியிட்டதாக கோவை 360 டிகிரி யூடியூப் சேனல் மீது கோவை மாநகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.