குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்!.. ரூ.1000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் வினியோகம்..!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களுடன் கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் ஆகியவை நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கியது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த பொருட்கள் தரமற்றதாகவும், கெட்டுப்போனதாகவும் பல்வேறு பகுதிகளில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனையடுத்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ரொக்க்ப்பணம் மற்றும் பரிசு தொகுப்பு தமிழகத்தில் உள்ள 33,000 நியாயவிலை கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், ரூ.1000 ரொக்க பணத்தை பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 2 ஆம் தேதி ரூ.1000 ரொக்கம் வழங்குவதை சென்னையில் முதலமைச்சரும் மற்ற மாவட்டங்களில் அந்ததந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்களும் தொடங்கி வைப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.