அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை! அதிரடியாக அறிவித்த ஜார்க்கண்ட் மாநில அமைச்சர்!



govt job only for government school student

தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் அரசு பள்ளியில் பணிபுரியும் அதிகப்படியான ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க தயங்கி வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக தமிழகம் உள்பட அனைத்து பல மாநிலங்களில் அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே இனி அரசு வேலை என்று  சட்டத்தை கொண்டு வரவேண்டும் என ஜார்க்கண்ட் மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ அதிரடியாக அறிவித்துள்ளார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாக இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறியிருப்பதாக தெரிகிறது.

Govt school

இதுகுறித்து அமைச்சர் ஜகர்நாத் மதோ கூறுகையில், தனியார் பள்ளிகளில் படித்து விட்டு அரசு பணிக்கு மக்கள் செல்வது நியாயமில்லை என்றும் அரசாங்க வேலை வேண்டும் என நினைத்தால் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

இருப்பினும் இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்ட பின்னரே இந்த திட்டத்தை சட்டமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசு பள்ளிகளில் படித்து வரும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை மாதந்தோறும் அரசு செலவழித்து வருவதாகவும் இதனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளியை நோக்கி மாணவர்கள் படை எடுத்து வருவதாகவும் இது அரசுக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார்.