நிதிநிலை அறிக்கையில் வெளியாகிறதா ...? மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கீடு...!!



Is it disclosed in the financial statement ...? Calculation of electricity bill once a month...

மின்சாரத் துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தமிழக அரசின் 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை  நாளை மறுநாள் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில், மின்சாரத் துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

மின்சார துறையில், கடந்த நிதியாண்டில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருந்து என்றும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு நடவடிக்கைகளால் 200 கோடி ரூபாய் இழப்பை குறைத்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சூரிய ஒளி மின் உற்பத்தி மூலம் 3,088 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைத்து வருகிறது. இந்நிலையில், அவற்றை 20ஆயிரம் மெகாவாட் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க அறிவிப்பு இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் மின் இழப்பு, மின்சார முறைகேடு ஆகியவற்றை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்காதவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது, ஒரே இடத்தில் இரட்டை மின் இணைப்பை பெற்றிருந்தால், ஒரே மின் இணைப்பாக மாற்றுவது ஆகியவை நிதிநிலை அறிக்கையில் இடம்பெறலாம் என்று தெரிகிறது.

தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை கட்டுப்படுத்த  அறிவிப்புகள், கூடுதலாக 1000 மெகா வாட் மின்சாரத்தை பெறுவதற்கான வடசென்னை அனல் மின் நிலையத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் தொடர்பாக, காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி என்று மின்சாரத்துறை பல்வேறு அறிவிப்பு வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட மாதம் ஒருமுறை மின் கணக்கீடும் முறை மற்றும் வருடம் தோறும் கட்டண உயர்வை தவிர்க்க மாற்று நடவடிக்கை பற்றிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக  எதிர்பார்க்கப்படுகிறது.