"இயற்கைதான் மண்ணுக்கும், பொண்ணுக்கும் நல்லது" - பிளாஸ்டிக் நாப்கினுக்கு விடுதலையளிக்கும் மூலிகை நாப்கின்..!



Kallakurichi Chinna Salem Woman Made Herbal Napkin Nature Saves Land and Girl SHe Says

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் நகரில் வசித்து வருபவர் பிரீத்தி. இவர் இரசாயனம், பிளாஸ்டிக் இல்லாத இயற்கை முறையிலான நாப்கினை தயாரித்து வருகிறார். மேலும், நாப்கினை சுகாதார முறைகளில் பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வையும் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார். 

இதுகுறித்து திருமதி. பிரீத்தி தெரிவிக்கையில், "இயற்கைதான் மண்ணுக்கும், பெண்ணக்கும் நல்லது. நான் பிறந்தது வேலூர் மாவட்டத்தில், அப்பா, அம்மா மற்றும் தம்பி என எனது குடும்பம் சிறியது. நான் பி.எஸ்சி கம்பியூட்டர் சயின்ஸ் படித்து இருக்கிறேன், எம்.சிஏ-வும் படித்துள்ளேன். திருமணத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் வசித்து வருகிறேன். 

பள்ளியில் படித்து வரும்போதே எனக்கு தையல் மீது ஆர்வம் இருந்தது. இதனால் கல்லூரியில் படிக்கும் சமயத்தில் பெண்களுக்கு பயனுள்ளதாக தொழிலை செய்ய வேண்டும் என நினைத்து யோசனை செய்ததில், எனக்கு 'நாப்கின்' தயாரிக்கும் எண்ணம் வந்தது. இயற்கையின் மீது எனக்கு இருந்த அலாதி ஆர்வத்தால், மூலிகையை வைத்து நாப்கினை தயாரிக்க திட்டமிட்டேன்.

எனக்கு முதலிலேயே தையல் அனுபவம் உள்ளதால், நாப்கினுக்கு எந்தெந்தெ மூலிகை பயன்படுத்தத்தக்கது என்ற தேடலில் இறங்குகையில், மூலப்பொருளாக பருத்திப்பஞ்சு, துளசி, வேப்பிலை, சோற்றுக்கற்றாழை பொடி இறுதி செய்யப்பட்டது. இந்த மூலிகை பொடிகளை எவ்வித பிளாஸ்டிக்கையும் பயன்படுத்தாமல், பருத்தியால் உருவாக்கப்பட்ட நானோ கிளாத் துணி வைத்து தயாரித்தேன். 

Chinna Salem

இதனை பயன்படுத்தி பார்க்கையில் அதனால் ஏற்பட்ட நன்மைகளை உணர்ந்தேன். மூலிகையால் கிருமித்தொற்று, துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைத்தது. இதனை அனைத்து பெண்களுக்கும் கொண்டு செல்ல முடிவெடுத்தேன். எனது குடும்பத்தார் ஆதரவாக இருக்கிறார்கள். எனது குழந்தையை அவர்கள் கவனிப்பதால், நான் தொழிலில் முழுமையாக ஈடுபடுகிறேன். மூலப்பொருட்கள் வாங்கவும், வாடிக்கையாளர்களிடம் தயாரிப்பை கொண்டு சேர்க்கவும் உறுதுணையாக இருக்கிறார்கள். 

மூலிகை நாப்கின் குறித்து அறிந்த நண்பர்களும், உறவினர்களும் உதவி செய்கிறார்கள். சமூக வலைதளத்தில் அவர்கள் அதன் நன்மைகள் குறித்து பகிர்ந்து வருகிறார்கள். பிளாஸ்டிக், இரசாயனம் இல்லாத நாப்கினை பெண்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதுவே எனது இலட்சியம். அதனைப்போல, குழந்தைகளுக்கு உபயோகப்படும் டபயரையும் இயற்கை முறையில் கொண்டு செல்ல வேண்டும். அதுவே பெண்ணையும், மண்ணையும் காப்பாற்றும்.