தயாராகுங்க.. உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகள்.! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!



madurai-district-collector-announced-jallikattu-dates

தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் போற்றும் வகையில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தென்மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் மிகச் சிறப்பாக நடைபெறும். அவற்றிலும் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண நாட்டின் பல பகுதி மக்களும் அப்பகுதிகளுக்கு வருகை தருவர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகள் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதலாவதாக ஜனவரி 15-ஆம் தேதி அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள திடலில் ஜல்லிக்கட்டு நடைபெறும்.

தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி பாலமேடு மஞ்சமலை ஆறு திடலிலும்,  அலங்காநல்லூரில் ஜனவரி 17-ஆம் தேதி கோட்டை முனி வாசல் மந்தை திடலிலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதற்கான  முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு குறித்து சம்பந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளார்.