மாணவி ஸ்ரீமதியின் தாயாருக்கு பாராட்டு: மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கோஷமிட்ட மாதர் சங்கம்..!



Mathar Sangam chanted for justice for the death of the student

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ஸ்ரீமதி (17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் பகுதியில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் ஸ்ரீமதி 3 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் இதனை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். கடந்த 17 ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் பள்ளி சூறையாடப்பட்டது. அங்கிருந்த பள்ளியின் பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இதில் மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து குற்றப்பிரிவு குற்றபுலனாய்வுதுறையினரும் (CBCID), கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினரும், சமூக வலைதளங்கள் மூலம் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் பற்றி சைபர் கிரைம் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதிக்காக போராடிய அவரது தாய் செல்வியை அழைத்து பாராட்டி கௌரவித்துள்ளனர். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி 16வது மாநில மாநாடு கடலூரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், மாணவி ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதி கேட்டு கோஷம் எழுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கண்ணீருடன் பேச்சை தொடங்கிய ஸ்ரீமதியின் தாயார் செல்வி தனது மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்க மாதர் சங்கம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.