பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்ததற்கு இது தான் காரணம்.! ஓப்பனாக பேசிய தோனி.!
2022 ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியும், சென்னை அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு173 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில், பெங்களூரு அணியை 170 ரன்களுக்கு கட்டுப்படுத்தி எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் சிறந்த தொடக்கத்தைப் பெற வேண்டியிருந்தது. நாங்கள் பேட்டிங் செய்யும்போது மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாகத்தான் இருந்தது. துவக்க வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.
ஆனால் அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்களை பறிகொடுத்ததுதான் தோல்விக்கு முக்கிய காரணம். ரன்கள் எவ்வளவு தேவை என்பதை தெரிந்துகொண்டு ஆட்டத்திற்கு தகுந்து ஷாட்களை நாம் தான் மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. தவறுகள் குறித்து பேசி, இனி வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.