நடராஜர் கோவில் விவகாரம்: மீண்டும் தீட்சதர்களிடம் முட்டி, மோதும் அறநிலையத்துறை..!



Nataraja temple issue: Charity department again knocking and clashing with initiates

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் உலகப் புகழ் பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆய்வு நடத்த உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்திருந்தது. இதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து கோவில் பொது தீட்சதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் பின்பு கடந்த மாதம் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் 3 நாட்களில் 6 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் நேரிலும், கடிதங்கள் மற்றும் இ-மெயில் மூலமாக கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் ஹேம சபேச தீட்சிதர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், மேலும் கூறியிருப்பதாவது:-

கடந்த 2005 ஆம் ஆண்டில் கடைசியாக கோவிலில் நடைபெற்ற ஆய்வு அறிக்கையின் நகல் நாங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் கடந்த மாதம் 9 ஆம் தேதி வழங்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கை சம்பந்தமான எங்களது குறிப்புரை மற்றும் எங்கள் தரப்பு ஆட்சேபனைகளை அனுப்புவதற்காக, தற்போது எங்களது பரிசீலனையில் உள்ளது.

17 ஆண்டுகள் கழித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் மேற்படி அறிக்கையின் நம்பகத்தன்மை பற்றி ஏற்கனவே எங்களால் ஆட்சேபனை எழுப்பப்பட்டுள்ளது. தற்போது மிக குறுகிய கால அவகாசத்திற்குள் 17 ஆண்டுகளுக்கு பிறகு, நகைகள் ஆய்விற்காக வருகிற 25 ஆம் தேதி வருவதாக எங்களிடம் முன் கூட்டியே தெரிவிக்காமல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.

கடந்த 2 மாதங்களாக நடராஜர் கோவில் சம்பந்தமாக தாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை கூர்ந்து நோக்கும் போது நாங்கள் ஆய்வுக்கு முன்பே ஏற்கனவே முடிவு செய்து ஆய்வுக்கு வரவுள்ளதாக தகவல் அனுப்பி உள்ளீர்கள் என்று சந்தேகப்படுகிறோம். கோவில் நகைகள் பராமரிப்பில் நேர்மையும், நம்பக தன்மையும் உள்ளது என்பதை வெளிப்படையாக நிரூபிக்கும் வகையில் நாங்கள் தற்போது நகைகள் ஆய்வுக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளோம்.

நடராஜர் கோவில் நகைகள், கோவில் பாரம்பரியமான நடைமுறைப்படியும் கோவில் சட்டப்படியும் 20 நபர்களின் கூட்டு பொறுப்பில் உள்ளது. தற்போது கோவில் சாவி கூட்டுப்பொறுப்பில் உள்ள தீட்சிதர்கள் சிலர் வட இந்தியாவில் நடைபெறும் வேத பாராயண விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சென்று உள்ளதாலும், எங்களது கோவில் வழக்கறிஞர் மற்றும் தணிக்கையாளர் வெளியூர் சென்றுள்ளதாலும், தங்களது ஆய்வினை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2 வது வாரத்திற்கு பின், எங்களிடம் முன்கூட்டியே தேதி தெரிவித்து ஆய்வு மேற்கொள்ள கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நடராஜர் கோவில் நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வின்போது எங்கள் சார்பில் நகை மதிப்பீட்டாளர்கள் பங்கு பெறுவார்கள் என்றும், நகை சரிபார்ப்பு வெளிப்படைத் தன்மைக்காகவும் பாதுகாப்பு நடவடிக்கையாகவும் காணொலி மூலம் பதிவு செய்யப்படவேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.