நாக்கிற்கு பதிலாக குழந்தையின் பிறப்புறுப்பில் அறுவைசிகிச்சை.! அரசு மருத்துவமனையில் பரபரப்பு.! நடந்தது என்ன??
மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தையின் நாக்கிற்கு பதில் தவறுதலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அஜித் குமார். இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்தபோது நாக்கு சரிவர வளராமல் இருந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய பரிசீலனை செய்த நிலையில் அவர்கள் குழந்தையை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் அங்கு குழந்தைக்கு நாக்கில் சிகிச்சை செய்வதற்கு பதில் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து பெற்றோர்கள் கேட்டதை தொடர்ந்து குழந்தைக்கு அவசர அவசரமாக நாக்கில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விசாரணை நடத்தகோரி குழந்தையின் தந்தை அஜித் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து இராஜாஜி மருத்துவமனை முதல்வர் கூறுகையில், மயக்கமருந்து கொடுத்த பின் குழந்தையின் வயிற்றுப்பகுதியை ஆய்வு செய்த போது குழந்தைக்கு சிறுநீரக பிரச்சினை இருப்பது தெரியவந்தது. அதனால் மற்றொரு முறை மயக்கமருந்து கொடுக்கவேண்டாம் என்று ஒரே நேரத்திலேயே குழந்தைக்கு நாக்கு மற்றும் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. அது தவறுதான். குழந்தைக்கு தவறாக எந்த சிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை. நல்லதுதான் செய்துள்ளோம். குழந்தை நலமாக உள்ளது என கூறியுள்ளார்.