காயலான் கடையில் கைவரிசை... இந்து முன்னணி மாநில நிர்வாகி உட்பட 13 பேர் கைது.!
இரும்பு குடோனில் புகுந்து பொருட்களை திருடியதாக இந்து முன்னணி மாநில இளைஞர் அணி செயலாளர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர் முத்தையா(51). இவர் தனது அண்ணனின் இரும்பு குடோனில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அந்த இரும்பு குடோன் சிங்காநல்லூர் வெள்ளலூர் சாலையில் அமைந்திருக்கிறது. குடோனில் உள்ள அறையில் முத்தையாவும் இரும்பு குடோனில் வேலை பார்க்கும் மற்றொரு நபரான பேச்சு முத்துவும் தங்கி இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடோனுக்குள் புகுந்த மர்ம நபர்கள் முத்தையா மற்றும் பேச்சுமுத்துவை கை கால்களை கட்டி அறையில் அடைத்து வைத்துவிட்டு குடோனில் இருந்த அலுமினியம், தாமிரம் உட்பட பொருள்களை வேண்களில் ஏற்றி சென்றது. மறுநாள் குடோனிற்கு வந்து பார்த்த முத்தையாவின் அண்ணன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முத்தையாவையும் பேச்சிமுத்துவையும் விடுவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி மாநில இளைஞரணி செயலாளரான பிரபு என்ற காலனி பிரபு உட்பட 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.