திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நேற்றய விபத்துகளில் பலியான 9 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பாதிரி கிராமத்திற்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுமோ வாகனம் ஒன்று செல்லும் போது நேற்று காலை திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை கிராமத்தில் இருந்து, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த வாகன விபத்தில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று பள்ளத்தில் கவிழ்ந்து இருந்த வாகனம் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். காருக்குள் காயங்களுடன் இருந்த இரண்டு குழந்தைகளை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள வடக்காட்டுப்பட்டி கிராமம் அருகே திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மிதுன்கிஷோர், அரவிந்த் மற்றும் பரத் ஆகிய 3 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தமிழக முதல்வர் பேசுகையில் விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டையில் நடந்த விபத்து செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த இரு சாலைவிபத்துகளில் உயிரிழந்த 9 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த சாலை விபத்துகள் குறித்து அறிந்தவுடன், இந்த விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திந்து ஆறுதல் கூறவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டேன்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த விபத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் 2 பேரும் விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன். மேற்கண்ட சாலை விபத்துகளில் உயிரிழந்த 9 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரணநிதியில் இருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.