சசிகலா எப்போது வெளியே வருகிறார்.? கர்நாடக சிறைத்துறை பதில்! உச்சகட்ட மகிழ்ச்சியில் சசிகலா ஆதரவாளர்கள்!
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என கூறப்பட்டு வந்தது. அவர் வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னர் எப்படியும் வெளியே வந்து விடுவார் என்ற காரணத்தால், அவரது வருகை தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அவரது கேள்விக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை கண்காணிப்பாளர் லதா கடிதம் மூலம் பதில் அளித்துள்ளார்.
அந்த கடிதத்தில், சிறை ஆவணங்கள்படி உச்சநீதிமன்றம் விதித்துள்ள அபராதத்தொகையை செலுத்தினால், சசிகலா அனேகமாக அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆகலாம். அபராதத்தொகையை செலுத்த தவறினால், அவர் மேலும் 13 மாதங்கள் அதாவது 2022-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.