வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு நெல்லை, திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்: மதுரை இரயில்வே கோட்டம் அறிவிப்பு..!



special-train-between-nellai-and-thiruchendur-on-vaikas

வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு நெல்லை மற்றும் திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே கூறியுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு நெல்லை மற்றும் திருச்செந்தூர் இடையே ஜீன் 12 ஆம் தேதி எக்ஸ்பிரஸ் கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கு முன்பதிவு செய்ய தேவையில்லை என்று மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த எக்ஸ்பிரஸ் கட்டண சிறப்பு ரயில் (வண்டி எண்- 06703) நெல்லையில் காலை 11.15 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.45 மணிக்கு திருச்செந்தூர் ஒரு மார்க்கமாக  சென்றடையும்.

இன்னொரு மார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் ஒரு ரயில் (வண்டி எண்-06704) இரவு 10.10 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் வந்தடையும்.

இந்த 2 ரயில்கள் இரு மார்க்கங்களிலும் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 முதல் வகுப்பு பொதுப்பெட்டி மற்றும் பார்சல் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.

மேலும், திருச்செந்தூரில் இருந்து மதுரை வழியாக பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் கட்டண பயணிகள் ரயில் (வண்டி எண்-16731 /16732) மற்றும் நெல்லை-திருச்செந்தூர் சிறப்பு எக்ஸ்பிரஸ் கட்டண பயணிகள் ரயில் (வண்டி எண்-06673 /06678) ஆகியவற்றில் ஜீன் 8 ஆம் தேதி முதல் ஜீன் 13 ஆம் தேதி வரை ஒரு பொதுப்பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.