சர்க்கார்: "பெருகும் ஆதரவும், வலுக்கும் எதிர்ப்புகளும்" ஒரு முழு கவரேஜ்..!



supporters and haters of sarkar full coverage

தமிழக அரசியலில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் அரசின் இயலாமையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எடுக்கப்பட்ட சர்க்கார் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றுவிட்டது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு காரணம் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெறும் போராட்டங்கள் தான்.

உண்மையை உரக்க சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் உருவானது தான் சர்க்கார் திரைப்படம். இன்று நடக்கும் அசாதாரண சூழ்நிலைகள் மூலம் அவர்கள் சொல்ல வந்த கருத்துக்கள் எதிர்பார்த்தவாறே மக்களிடம் சென்றடைந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

supporters and haters of sarkar full coverage

இந்நிலையில் சர்க்கார் படத்திற்கு எந்த அளவிற்கு ஆளும் கட்சியால் நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறதோ அதே அளவிற்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பிற தலைவர்கள் மூலம் ஆதரவும் பெருகி வருகிறது. 

அந்தவகையில் இதுவரை சர்க்கார் படத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் மற்றும் ஆதரவுகளை பற்றி இங்கு பாப்போம்: 

supporters and haters of sarkar full coverage

ஆளும் கட்சியின் எதிர்ப்புகள்:

சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை அரசியல் நோக்கத்துக்காக படத்தில் சேர்த்துள்ளனர். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு நல்லது அல்ல. மத்திய அரசின் திரைப்பட தணிக்கை துறையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களே அங்கம் வகிக்கின்றனர். அவர்கள்தான் திரைப்படங்களை பார்த்து சான்றிதழ் வழங்குகின்றனர். எனவே இதற்கும், மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய   காட்சிகளை அவர்களாக நீக்கவில்லையெனில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்துவோம்  என்று கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து அமைச்சர்கள் சண்முகம் மற்றும் ஜெயக்குமார் படத்தை பற்றியும் நடிகர் விஜயை பற்றியும் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். 

supporters and haters of sarkar full coverage

இந்நிலையில், மதுரை, கே.கே.நகரில் உள்ள சினிப்பிரியா தியேட்டர் முன்பாக அதிமுக., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். உடனடியாக இப்படத்தை நிறுத்த வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் இந்தபோராட்டம் தமிழகம் முழுவதும் தொடரும், சர்கார் படத்தை எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கோஷமிட்டனர். அதிமுக.,வினரின் எதிர்ப்பால் அந்த தியேட்டரில் நண்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது.

மதுரையை தொடர்ந்து கோவை, தேனி, திருச்சி, நெல்லை, கடலூர், விழுப்புரம், ஊட்டி சென்னையிலும் சர்கார் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சென்னையில் காசி தியேட்டர் முன்பு ஏராளமான அதிமுக., தொண்டர்கள் கூடி சர்கார் படத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த சர்கார் பட போஸ்டர், பேனர்களை அடித்தும், கிழித்தும் துவம்சம் செய்தனர்.

மேலும் இன்று அதிமுகவின் ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் திரு. ஆர். பி. உதயகுமார் "இனிவரும் காலங்களில் அரசியல் நோக்கத்தோடு சர்ச்சைக்குரிய காட்சிகளை வைக்க வேண்டாம். அரசின் இலவச திட்டங்களை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை. நடிகர் விஜய் ரசிகர்களின் இல்லங்களிலும் அரசின் விலையில்லா பொருட்கள் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.



காட்சிகள் நீக்கம்:
எதிர்ப்பு வலுப்பதால் சர்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பில் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று சர்ச்சை காட்சிகள் நீக்கப்படலாம் என்றும், இதற்காக மீண்டும் தணிக்கை குழுவுக்கு படம் அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘சர்கார்’ படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்குவதற்கு பட தயாரிப்பு நிறுவனம் விண்ணப்பித்தால், அந்த படத்தை மறுதணிக்கை செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்று தணிக்கை குழு அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருகும் ஆதரவு:
ஒருபக்கம் படத்திற்கு எதிர்ப்புகள் பெருகி வந்தாலும் மற்றொரு பக்கம் ஆதரவும் பெருகி வருகிறது. ஆளும் அரசின் மீது அதிருப்தியில் இருக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சர்க்கார் படத்திற்கு ஆதரவை கொடுத்து வருகின்றனர். 

கமல்:
முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார்  படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை  ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள்  கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.



ரஜினி:
தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.



விஷால்:
தணிக்கை குழு படத்தை பார்த்து காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்த பின்பு அதனை எதிர்த்து போராட்டங்கள் செய்வது நல்லது அல்ல என்று தெரிவித்துள்ளார்.



சீமான்:
மக்களை இலவசப் பொருட்களுக்காக காத்திருக்கும் அவல நிலைக்கு தள்ளிய இந்த அரசு வெட்கப்பட வேண்டும். அதனை எடுத்து கூறினால் இவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது. அப்படி வெட்கமாக இருந்தால் விசம் குடித்து செத்துப்போங்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

குஷ்பூ:
ஒரு திரைப்படத்துக்கு தணிக்கை துறை அனுமதி அளித்தபின் இயக்குநரின் சுதந்திரத்தில் அத்துமீறும் உரிமையை எது கொடுத்தது? அல்லது யார் கொடுத்தார்கள்? இதிலிருந்து ஒரு கதையில் வரும் சிறு புனைவுகூட தமிழகத்தைக் கொள்ளையடிக்கும் சின்ன புத்திக்காரர்களை அச்சுறுத்துகிறது என்பது தெரிகிறது. 



அரசியலும் அதிகாரமும் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. கையை முறுக்கிக் கொண்டு, அச்சுறுத்தி, பய உணர்வை ஏற்படுத்துவது இது முதன்முறை அல்லவே. விஜய்யின் முந்தையப் படங்களுக்கும் இப்படியான எதிர்ப்பு கிளம்பியதை நாம் பார்த்திருக்கிறோம். நம் எம்.எல்.ஏ.,க்களை எது இப்படியெல்லாம் அச்சம் கொள்ளவைக்கிறது? அதிமுகவுக்கு பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக் என்று குஷ்பூ சர்க்கார் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

வைகோ:
சுதந்தரத்திற்கு பிறகு 1950 ஆம் ஆண்டில் வெளியான பராசக்தி படத்தில் அப்போதைய அரசுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் நடித்த இப்படத்தில் அதிமுக அரசுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பட்டுள்ளது. இது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை சினிமாவாக எடுப்பதில் தவறொன்றுமில்லை. இதற்காக அரசு சம்ம்பந்தப்பட்டவர்களுக்கு நெருக்கடி கொடுப்பது சரியில்லை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

பா.ரஞ்சித்:
விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் என்றோ “ஜனநாயகம்” அழிந்து/இழந்து போய்விட்டது என்று!!!  என்று காலா பட இயக்குனர் பா.ரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார்.



இந்நிலையில் சர்க்கார் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.