ரம்மி கேம் விளம்பரத்தில் தமிழ் நடிகர்கள்.. தமிழர்களின் உயிரை காவு வாங்கும் திரையுலகம்..! காசுக்காக அந்த வேலையும் பார்ப்பீங்களா?..!!



tamil-actor-manobala-acts-online-rummy-game-advertiseme

ஆன்லைன் ரம்மி கேமுக்கு தடை விதிக்க வேண்டும், அதில் நடித்துள்ள நடிகர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ரம்மி போன்ற சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டு இருந்த நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சியின் உந்துதலாக இணையவழியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான பல இளைஞர்களும் பணத்தை முதலீடு செய்து இழந்து, இறுதியில் தற்கொலை செய்துகொண்டனர். பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தது. சிலர் வாங்கிய கடனுக்கு குடும்பத்தினர் பதில் சொல்லவேண்டியிருக்குமென குடும்பத்துடனும் தற்கொலை செய்து மடிந்தனர். 

இதனையடுத்து, பாமக நிறுவனர் இராமதாஸ், மதிமுக வைகோ, சி.பி.ஐ.எம் பாலகிருஷ்ணன், வி.சி.க திருமாவளவன் உட்பட பல அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து, கிட்டத்தட்ட 17 பேர் உயிரிழந்த பின்னர், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்பட்டது. 10 க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்த பின்னரே, அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதல்வர் மு.க ஸ்டாலின் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

manobala

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜங்லி கேம்ஸ் நிறுவனம் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், தமிழக அரசின் ரம்மி தடைக்கான அவசர சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், அரசு தெரிவித்த சாராம்சங்களை மாற்றி, மற்றொரு சட்டம் இயற்றவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், விரைவில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 5 மாதத்தில் 12 பேர் ரம்மி பண இழப்பால் உயிரிழந்துள்ளனர்.

ஆனால், ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள் பிரபல தமிழ் நடிகர்கள், நடிகைகள் மூலமாக விளம்பரம் செய்யப்பட்டு வரும் நிலையில், இதற்கு சமூக ஆர்வலர்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது, நடிகர் மனோபாலா ரம்மி கேமுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களின் விளம்பர படத்தில் நடித்துள்ளார். இந்த வீடியோ நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக முதல்வர் விரைவில் ரம்மியை தடை செய்து, அதில் நடித்த நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர். 

manobala

மேலும், தமிழர்களின் உழைப்பை வைத்து திரைப்பட வருவாயை ஈட்டி வெற்றிவிழா கொண்டாடி வருமானம் பார்த்து வரும் நடிகர்கள், அவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும், உபத்திரம் செய்யாமல் இருங்கள், இதுபோன்ற சூதாட்டத்தால் பலரும் வாழ்க்கை, உயிரை இழந்துள்ள நிலையில், அவர்களின் உணர்வுகளை கொஞ்சம் கூட மதிக்காமல், இவ்வாறு பொறுப்பற்று வெறும் பணத்திற்காக இப்படியான விளம்பரத்தில் நடிப்பது ஏன்? காசு கொடுத்தால் எந்த வேலையையும் செய்திடுவீர்களா? என பல கண்டன குரலையும் எழுப்பி வருகின்றனர். 

ட்விட்டர் பக்கத்தில் தொண்டைநாடு என்பவர் பதிவிட்டுள்ள பதிவில், "இது போன்ற ஆன்லைன் ரம்மிகளில் விளையாடி பலகுடும்பம் சீரந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 5 மாதத்தில் மட்டும் 12 உயிர் போய் இருக்கு. இப்படி இருக்க.. கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் கேவலம் பணத்துகாக எந்த விளம்பரம் கூப்டாலும் நடிப்பிங்களா? மனோபாலா. கொஞ்சமாவது சமூக அக்கறை இருந்தால் இந்த மாதிரியான விளம்பரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்க மாட்டீர்கள். தமிழ் மக்கள் உங்கள் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்கள்.. ஆனால் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இப்படி பல உயிர் போவதற்கு நீங்கள் காரணமாக உள்ளீர்களே? இது நியாயமா? உயிர் பலி மட்டும் அல்லாமல் எனக்கு நெருங்கிய நண்பர்களே 2 பேர் 10 லட்சம் இழந்து உள்ளர்கள். நேற்று தான் என்னிடம் சொல்லி அழுதார்கள். மொத்தமும் கடன் வாங்கி இருக்கிறார்கள். தற்கொலை தவிர வேறு வழி இல்லை என்றார்கள்.

பின் அவர்களின் குடும்பத்திடம் பேசி அந்த எண்ணத்தில் இருந்து வெளியேற்றி இருக்கிறேன். இப்படி இருக்க உங்கள மாதிரியான நடிகர்கள் ஈசியா நடிசிட்டு போய்டுறிங்க..ரம்மியால் அடுத்து ஒரு தற்கொலை நடந்தால் மனோபாலா உள்ளிட்ட விளம்பரத்தில் நடித்து இந்த கேமை ஊக்குவித்த அனைவர் மீதும் தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைசியாக 3 sec disclaimer போட்டுட்டா என்னவேனா பண்ணலாமா? இதுவே இறுதியாக இருக்கட்டும். இதில் நடித்த நடிகர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வர் மு.க ஸ்டாலின் உடனே இதற்கு அவரச சட்டம் இயற்றுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மதுவை குடிக்கவைத்து தமிழ் சமூகத்தையே சீரழிக்க வைத்துள்ள அரசியல் கட்சிகள், இனி வரும் நாட்களிலாவது அவர்களை நல்லநிலையில் வாழ விட, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மது, சூது மோகம் தனிமனிதனுக்கும், அவனது குடும்பத்துக்கும் பெரும் கேடானது என்று முன்னோர்கள் சொல்லிச்சென்ற நிலையில், அவற்றை தடுக்காமல், தனிமனிதனின் ஆசையை தூண்டும் வகையில் சிலர் செயல்பட்டு வருமானம் பார்க்க, எப்படியாவது முன்னேறிவிடமாட்டோமா? என உழைப்பவனின் மதியை மடைமாற்றி, அவனது வாழ்க்கையையே குழிதோண்டி புதைக்கும் அவலத்தை தடுக்கவேண்டும் என்பதே பலரின் ஆதங்க குரலாக இருக்கிறது.

பேராசை பெருநஷ்டம் என்பதை நினைவில் வைத்தால் நல்லது.