நான் யார் தெரியுமுள்ள., என்னையெல்லாம் எதுவும் செய்ய முடியாது - பீர் பாட்டிலுடன் போதையில் காவலர் தகராறு.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர், சுப்பிரமணியபுரம் பகுதியை சார்ந்தவர் ராஜகுரு (வயது 34). இவர் கடந்த 2011 ஆம் வருடத்தில் காவல் துறையில் இணைந்து பணியாற்றி வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக கடையநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்ற உத்தரவிட்டு, அதன் பேரில் கடையநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சேர்ந்தமரத்தை அடுத்துள்ள திருமலாபுரம் பகுதியில் நேற்று பணிக்காக சென்றிருந்த ராஜகுரு, சேர்ந்தமரம் - வீரசிகாமணி சாலையில் இருக்கும் மதுபானக்கடைக்கு காவல் சீருடையுடன் சென்றுள்ளார். அங்கு, கடாயில் மதுபானம் கேட்டு தகராறு செய்த நபர்களை அவதூறாக பேசிய ராஜகுரு, ஊழியர்களையும் திட்டி இருக்கிறார்.
மேலும், பீர் பாட்டிலை கைகளில் வைத்தவாறு, அங்கிருந்த நபர்களையும் அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட, இதனை அப்பகுதியில் நின்றவர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகவே, பார் ஊழியர்களும் சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் சேர்ந்தமரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மதுபோதையில் ரகளை செய்த காவல் அதிகாரி ராஜகுருவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவரின் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வீடியோ வைரலானதால் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க புளியங்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டார்.
இதன்பேரில் நடந்த விசாரணையில், காவல் அதிகாரி ராஜகுருவின் மீதான உண்மை விவகாரம் தெரியவரவே, காவல் அதிகாரி ராஜகுரு பணியிடைநீக்கம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கபடுகிறது.