ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரம் : ஆறு நாட்களுக்கு பின்பு உடல் அடக்கம்..!
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகேயுள்ள நுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் பிளம்பராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அஸ்வின் (11). இவர் அதங்கோடு பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 24 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற அஸ்வின் ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்தால் உடல்நலம் பாதிக்கபட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிக்சைபிரிவில் அனுமதிக்கபட்டிருத்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 17 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்து 29 நாட்கள் கடந்தும் காவல்துறையினரால் குற்றவாளிகளை கண்டறிய முடியாததால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றபட்டுள்ளது.
இதற்கிடையே அஸ்வினின் உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து வைக்கப்பட்டிருந்தது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை அஸ்வினின் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று அவரது உறவினர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதனையடுத்து அரசியல் கட்சியினர்சிலர் குற்றவாளிகளை கைது செய்ய கோரி போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி ஹரன் பிரசாத் ஆகியோர் அஸ்வின் உறவினர்களிடம் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்த நிலையில், நேற்று மாலை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த அஸ்வின் உடலை பெற்றுக் கொண்டனர். பின்னர் அவரது உடல் அவரது கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.