காக்கி சட்டையில் கறை படிந்த சம்பவம்... கையூட்டு வாங்கிய காவல் உதவி ஆய்வாளர்.. கையும் களவுமாக சிக்கியது எப்படி..?
தஞ்சாவூர் அருகே 10000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் போலீசாரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையில் குடும்பத் தகராறு காரணமாக தனது மகன்கள் மீது மூதாட்டி ஒருவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரினை பெற்றுக் கொண்ட எஸ்.எஸ்.ஐ மகேந்திரன் புகாரை விசாரிப்பதாக மூதாட்டியிடம் கூறி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் மூதாட்டியின் நான்காவது மகனான வெள்ளைச்சாமியை அழைத்து உண்மைக்கு புறம்பான வழக்கு என்று இந்த வழக்கை முடித்து வைப்பதாக கூறி ரூபாய் 10,000 லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளைச்சாமி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசாயனம் தடவிய பணத்தை லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் வெள்ளைச்சாமியிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதனை அறியாத மகேந்திரன் வெள்ளைச்சாமியிடமிருந்து பணத்தை பெறும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.