சொந்த பணத்தை வைத்து சமைத்து கொடுத்து கடன்காரர்களான சத்துணவு அமைப்பாளர்கள்.. தேனியில் போர்க்கொடி.!



Theni Nutrition Center District Administration Activity

தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொடக்க, உயர்நிலைப்பள்ளியில் 703 சத்துணவு மையங்கள் செயல்படுகிறது. இம்மையத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் என 2100 பேர் பணியாற்றுவார்கள். தற்போதைய நிலைமையி 1600 பேர் மட்டும் பணியாற்றி வருகிறார்கள். 

சமீபத்தில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு என 100 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு, 3 கிராம் எண்ணெய், 2 கிராம் உப்பு, ரூ.1.75 க்கு காய்கறி வழங்கப்பட்டன. இதனைப்போல 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 150 கிராம் அரிசி, 15 கிராம் பருப்பு, 2 கிராம் உப்பு, 3 கிராம் எண்ணெய், ரூ.2.28 க்கு காய்கறி வழங்கப்படுகிறது.

இந்த பொருட்களுக்கான செலவீனம் மாவட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதலாகவே சத்துணவு மையத்திற்கு வழங்கப்பட்டு வந்த காய்கறி, எரிபொருள் மற்றும் மசாலா பொருட்கள் செலவு தொகை நிறுத்தப்பட்டுள்ளது. 

Theni

மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து இன்று பணம் வந்துவிடும், நாளை வந்துவிடும் என சத்துணவு அமைப்பாளர்கள் 2 மாதமாக சொந்த பணத்தை செலவு செய்து வருகின்றனர். சிலர் வட்டிக்கு பணம் வாங்கி குழந்தைகளுக்கு உணவு வழங்குகிறார்கள். மேலும், ஊழியர் பற்றாக்குறையால் ஒரு நபர் 2 முதல் 3 சத்துணவு மையங்களை கவனித்து வருகிறார்கள்.

இதனால் சத்துணவு ஊழியர்கள் கடன்காரர்களாகியுள்ள நிலையில், கடந்த 6 மாதமாகவே செலவின தொகைகள் சரிவர வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அங்கன்வாடி மையத்தில் எடைக்கான தராசுகளும் இல்லை. 

முன்னதாகவே வேலை நிறுத்தம் செய்யப்பட்ட காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியமும் வழங்கப்படவில்லை. இதனைப்போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே சத்துணவு அமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர். விரைவில் செலவின தொகைகள் வழங்கப்படவில்லை என்றால், போராட்டம் நடைபெறலாம் என்றும் அஞ்சப்படுகிறது.