கட்டாய திருமணத்திற்கு 23 வயது இளம்பெண் கடத்தல்.. காரை துரத்தி சென்ற இளைஞர்கள்.. உதவிய பொதுமக்கள் & ஆந்திர போலீஸ்..!
பெண்ணின் விருப்பமின்றி அவரை திருமணம் செய்ய கடத்தி சென்ற இளைஞர்கள் பொதுமக்கள், காவல் துறையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர். கட்டாய திருமணம் செய்ய இளம்பெண்ணை காரில் கடத்திய கும்பல் கைதான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு, அத்திமாஞ்சேரி பகுதியில் இளம்பெண் காரில் கடத்தி செல்லப்பட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் காரை பின்தொடர்ந்து சென்ற நிலையில், கார் ஆந்திர பிரதேசம் நோக்கி பயணம் செய்துள்ளது.
பெண்ணை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து காரை துரத்தி சென்றுள்ளனர். பள்ளிப்பட்டு காவல் துறையினர் ஆந்திராவில் உள்ள எஸ்.ஆர் புரம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.
இதனையடுத்து, ஆந்திராவின் எஸ்.ஆர் புரம் காவல் நிலைய அதிகாரிகள் காரை மடக்கிப்பிடித்து குற்றவாளிகளை தமிழ்நாடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், இதுகுறித்து பள்ளிப்பட்டு காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அத்திமாஞ்சேரி காலனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெயக்குமார் (வயது 30) கடத்தலில் ஈடுபட்டது அம்பலமானது.
அங்குள்ள கொடிவளைகாய் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து திருமணம் செய்ய ஜெயக்குமார் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். திருமணத்தில் விருப்பம் இல்லாத இளம்பெண் கத்தி கூச்சலிட்டதால் விபரம் மக்களுக்கு தெரியவந்துள்ளது. இறுதியில் கடத்தல் கும்பல் இளைஞர்கள் மற்றும் காவல் துறையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பெண்மணி பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்ட நிலையில், பள்ளிப்பட்டு காவல் துறையினர் ஜெயக்குமார் மற்றும் அவரின் நண்பர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் கடத்தப்பட்ட ஒருமணிநேரத்தில் மீட்கப்பட்டார்.