100 நாட்கள் வேலையில் விபரீதம்.. தேனீ தாக்குதலில் 34 பேர் காயம்.. கை, கால், முகம் வீங்கி மருத்துவமனையில் அனுமதி.!
கழுகுமலையில் நடந்த 100 நாட்கள் வேலையில் தேனீ திடீரென கொட்டியதால் 34 பேர் காயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, கழுகுமலை வெங்கடேசபுரம் கிராமத்தை சேர்ந்த 84 ஆண்கள் - பெண்கள், அப்பகுதியில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாட்கள் பணிக்கு சென்றுள்ளனர். அங்குள்ள ஓடையில் தண்ணீர் செல்ல இடையூறாக இருக்கும் சீமைக்கருவேல மரங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளது.
அப்போது, அங்கிருந்த ஒரு கருவேல மரத்தில் தேனீ கூடு இருந்துள்ளது. இதனை கவனிக்காத தொழிலாளர்கள் பணியில் ஈடுபட, தேனீ கூடு கலைந்த காரணத்தால் ஆத்திரமடைந்த தேனீக்கள் வேலையில் ஈடுபட்ட ஆண், பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில், அவர்களின் கை, கால் மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அவசர ஊர்தி மற்றும் இருசக்கர வாகனத்தின் உதவியுடன் 34 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.