போலீஸ் கொடூரமாக தாக்கியதில் ஒரே இரவில் தந்தை, மகன் மரணம்?! வெடித்தது போராட்டம்!



thoothukudi police attack dad and son

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் மொபைல் கடை வைத்திருப்பவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20ஆம் தேதி ஊரடங்கின் போது கடையை திறந்ததாக கூறி போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோரை கைது செய்தனர். காவல் நிலையத்தில் விசாரணையின்போது, போலீசார் தந்தை மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கி ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. 

மேலும், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கும் பதிவு செய்தனர். இதனையடுத்து பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறையில் பென்னிக்ஸை சந்திக்க சென்ற அவரது நண்பர்களிடம் போலீசார் தாக்கியதில் தனது ஆசன வாயில் இருந்து இரத்தம் வந்து கொண்டே இருப்பதாக பென்னிக்ஸ் கூறியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று இரவு 7.45 மணியளவில்  சிறையில் அவருக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி, சிறைக் காவலர்கள் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார்.‌ 

police attack

காயம் காரணமாக பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜ் மருத்துவச் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார் ஜெயராஜ். தந்தை, மகன் இருவரும் அடுத்ததடுத்து உயிரிழந்ததற்குக் காரணம் போலீசாரின் கடுமையான தாக்குதலே என்கின்றனர் உள்ளூர் பொதுமக்கள்.

 இந்தநிலையில், அவர்களது மரணத்தில் மர்மம் தொடர்வதால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சாத்தான்குளத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், இந்த மரணத்தை கண்டித்தும், போலீசார் மீது நடவடிக்கை கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.