குடும்ப உறுப்பினர் போல இருந்த பாசமிகு நாய் உயிரிழப்பால் சோகம்.. கல்லறை அமைத்து உடல் நல்லடக்கம்.!



Tirunelveli Kalakkad Dog Died Family Funeral Function

தனது குடும்பத்தில் ஒருவராக இருந்து வந்த நாய் உயிரிழந்த நிலையில், அதற்கு குடும்பத்தினர் கல்லறை கட்டி உடலை நல்லடக்கம் செய்த நிகழ்வு நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு, சிதம்பரபுரம் கிராமம் நாராயணசாமி கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுக நயினார் (வயது 56). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி பாக்கியலட்சுமி. தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களின் வீட்டில் கிளி, புறா உட்பட பறவைகள் மற்றும் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. 

கடந்த 2009 ஆம் வருடத்தில் இவர்களின் குடும்பத்திற்கு புதுவராக கேரளாவில் இருந்து போமெரியன் ரக நாயும் வாங்கி வரப்பட்டுள்ளது. அந்த நாய்க்கு பொம்மி என்று பெயரிட்டு, அதனை கடந்த 13 வருடமாக வளர்த்து வந்துள்ளனர். சமீபத்தில் பொம்மி 3 குட்டிகளை ஈன்ற நிலையில், அதில் 2 குட்டிகளை தங்களின் நண்பர்களுக்கு வழங்கியுள்ளனர். 

tirunelveli

கடந்த சில நாட்களாகவே வயது மூப்பு காரணமாக பொம்மி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவ சிகிச்சைகள் அளித்தும் பலனின்றி நேற்று பொம்மி பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் குடும்பத்தினர் பெரும் மனசோர்வுக்கு உள்ளாகினர். நாய் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல இருந்து வந்ததால், தங்களுக்கு சொந்தமான இடத்தில் கல்லறை கட்டி நாயை நல்லடக்கம் செய்துள்ளனர்.