குறைந்தது தக்காளி வரத்து; கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை..!



tomoto-price-hike-in-tamil-nadu-due-to-rain

கோயம்பேடு மார்கெட்டுக்கு மற்ற மாவட்டங்கள், மற்றும் மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததால் இன்று கிலோ தக்காளி விலை ரூ.70 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தேனி, ஓசூர் போன்ற பல பகுதிகளில் இருந்து தக்காளி டன் கணக்கில் கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில், சில நாட்களாக சென்னையிலுள்ள கோயம்பேடு மார்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் நாளொன்றுக்கு டன் கணக்கில் இறக்குமதி செய்யப்பட்டு வரும் வேலையில், நேற்று வெறும் 42 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்த்து, வந்தவுடனே வியாபாரிகள் அவற்றை வாங்கிச் சென்றதால் உடனடியாக தக்காளி காலியானது. இதனால் பலர் வெறும் கையுடன் திரும்பினர். இதன் காரணமாக பல பகுதிகளில் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது ரூ.70 ஆக அதிகரித்துள்ளது. மொத்த விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.55க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி மார்கெட்டிலுள்ள சில்லரை விற்பனை கடைகளிலும் தக்காளி விலை ரூ.60 முதல் ரூ.70க்கு விற்பனையாகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் எதிர்பாராத விதமாக கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால், குறைந்த அளவிலேயே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதால் தட்டுப்பாடு நிலவுவதாக கூறுகின்றனர்.